ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழர்களின் வீரவிளையாட்டை எதிர்த்துள்ள பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என லட்சக் கணக்கானோர் ஒன்றிணைந்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் இத்தகைய கலாச்சார பாதுகாப்பு போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தற்போது வரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் அரசு நிர்வாகத்தினை எதிர்த்தும் தற்போது மாணவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, மாணவர்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும், தனியார் நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுக்கு தனது ஆதரவினை தெரிவித்து இன்று கோவை வந்த நடிகர் மயில்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
ஒட்டுமொத்த தமிழக மக்களின் வயிற்று எரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டாம். ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும் வரை உலகமெங்கும் ஏதாவது ஒரு விபத்து நடக்கும். நேற்று டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதே அதற்கு உதாரணம். அதனால், தயவு செய்து ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை வாழவிடுங்கள்.
கர்நாடக மாநிலம் தண்ணீர் விடாமல் இருக்கிறது, அதை தமிழக அரசு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தந்த மாநில உரிமை பிரச்சனைகளாக கருதும் அரசு, ஜல்லிக்கட்டை ஏன் இந்திய அரசியலாக்குகிறது. இது எங்கள் மாநிலத்திற்குள் இருக்கும் உரிமை. ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். இல்லையென்றால் இந்த போராட்டம் தொடரும்" என்றார்.