ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பை கண்டித்து கோவை திருமலையாம்பாளையம் பகுதி பொதுமக்கள் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கோவை திருமலையாம்பாளைய பொதுமக்கள் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை பாடையில் எடுத்து சென்று செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உடனடியாக ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் அல்லது முதல்வர் பன்னீர் செல்வம் பதவி விலக வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.


சட்டக்கல்லூரி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மத்திய தொலைத்தொடர்பு அலுவலகத்திற்குள் புகுந்து பீட்டாவை தடை செய்யவும், மத்திய மாநில அரசுகள் அவசர சட்டத்தை கொண்டு வர வலியுறுத்திம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரைமணி நேரம் போராட்டம் நடைபெற்றதால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.
கோவை தொப்பம்பட்டி மற்றும் சின்னத்தடாகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பீட்டா அமைப்பை தடை செய்யவும், ஜல்லிகட்டிற்கு உடனே அரசு ஆணை வழங்கவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணாவிரதமிருந்தனர்.