கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டம் வ.உ.சி மைதானத்தில் மாபெரும் எழுச்சி பெற்றுள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒருபகுதியாக கோவையில் ஜல்லிக்கட்டிற்காக பல்வேறு தரப்பின் ஆதரவு அளித்தும் கோவையில் முழுக்கடையடைப்பு நடைபெற்றது. இதன் மையமாக நேற்றிரவு வ.உ.சி மைதானத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாணவர்கள் எழுச்சி கூட்டதிற்கு பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளையும் போராட்டத்திற்கு அழைத்து வருகின்றனர். பணிக்கு செல்பவர்களும் தங்களின் ஆதரவினை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். மேலும், இளைஞர்கள் மோடி போன்ற உருவம் சித்தரித்து அதனை போராட்டகளத்தில் கொண்டு வந்தும் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தும், பறை இசைகளிலும், சிறுவர் சிறுமியர் கம்பு சுத்தியும், சிறுவர்கள் ஒலிபெருக்கியின் மூலமாகவும் ஜல்லிகட்டிற்கு ஆதரவாகவும் பேசியும் பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தனர். மேலும் ஆங்காங்கே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஐந்தாவது நாளாக தொடரும் இந்த எழுச்சி போராட்டத்தில் மாணவர்கள் சாலைகளின் அமர்ந்தும் போராடி வருகின்றனர். மேலும் பெண்கள் சிலர் போராட்டத்தின் போது மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான முதலுதவிகளும் மைதானத்தின் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசரகட்டத்தில் மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
