கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை: பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரையிலான தூரத்தில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் தற்போது மாநிலம் முழுவதும் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரையிலான தூரத்தில் உள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறிய முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில், வழிபாட்டுத் தலங்கள் அருகே 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகே 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 255 கடைகள் என மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு இந்த 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்டு வந்த 500 மதுக்கடைகள் தமிழக அரசால் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter