விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தமிழகம் முழுவதும் அதிகளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா “தமிழர் பண்பாடும், சனாதன இந்து மதமும் ஒன்றே” என்ற தலைப்பில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

கோவை: கடந்த ஆண்டை விட இந்தாண்டு தமிழகம் முழுவதும் அதிகளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வாய்ப்பு உள்ளது என்றும், கோவையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை லைட் ஹவுஸ் பகுதியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் நடைபெற்ற ஆடி மாத மஞ்சள் நீர் அபிஷேக விழாவில் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆடி மாத மஞ்சள் நீர் அபிஷேக விழா மற்றும் தீர்த்த கலச நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ரம்ஜான் பண்டிகைக்கு அரசு சார்பில் அரிசி வழங்கப்படுவது போன்று, அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் நிகழ்வுகளுக்கும் அரசு உதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும், இதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் சுமார் 15 லட்சம் இடங்களில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இந்தாண்டு அதைவிட அதிகமான சிலைகள் வைக்கப்படும் என கூறினார். கோவையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா “தமிழர் பண்பாடும், சனாதன இந்து மதமும் ஒன்றே” என்ற தலைப்பில் நடைபெறும் எனக் கூறிய அவர், ராமகோபாலன் ஜியின் 100-வது ஆண்டு விழாவும் இந்தாண்டு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான ஆட்சி வழங்கப்படும் என தமிழக அரசு பதவியேற்கும்போது தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அது நடைமுறையில் எவ்வாறு இருக்கும் என்பதை வரும் காலம்தான் பதில் சொல்லும் என்றார்.



தமிழக அரசு இந்து மதத்திற்கு நேரடியாக இடையூறு செய்யவில்லை என்றாலும், கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக செயல்படுவது போன்ற தோற்றம் இருப்பதாக அவர் விமர்சித்தார். அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் தங்களது கிறிஸ்தவ அடையாளத்தை பெருமையாக வெளிப்படுத்துவதாகவும், சபாநாயகர் பைபிள் படிப்பதாகவும் அவர் கூறினார்.

அதேநேரத்தில், போராட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக நடவடிக்கைகளுக்கு அரசு உரிய முறையில் அனுமதி அளித்து வருவதை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது வரவேற்கத்தக்கது என்றும், கோவில்களுக்கு வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் தேவையின்றி செல்போன்களில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கும் வகையில் செல்போன் தடையை வரவேற்கலாம் என்றும் அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளதாகவும், சில கோவில் நிலங்களில் கிறிஸ்தவ கல்லூரிகள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டினார். இதுகுறித்து திமுக ஆட்சியில் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் ஏற்கனவே தெரிவித்ததாகவும், அப்போது அவரை சந்திக்க நேரம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசிடம் இந்த விவகாரங்கள் தொடர்பாக தெரிவிக்க தயாராக இருப்பதாகவும், சில இடங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுத்திருப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்த அவர், அதேநேரத்தில் மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்று, தமிழக அரசு சார்பில் விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...