நதியைத் தேடியவருக்கு தேசிய விருது! தினமலரின் திரு. செல்வகுமாருடன் ஒரு சந்திப்பு


நீர்வளம் முதல் கனிம வளங்கள் வரை அனைத்து வளங்களும் கிடைத்த காலங்கள் மாறி அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட அண்டை மாநிலத்தவரிடம் கையேந்த வேண்டிய அவலச் சூழல் ஏற்பட்டுவிட்டது நல்ல வளம் மிக்க தமிழகத்தில். ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அக்கிரமக்கார்கள் கையில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தை சீர்படுத்தும் நோக்கில் சமூக ஆர்வலர்கள் சிலர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஊழலுக்கும், சுரண்டலுக்கும் எதிரான சமூக ஆர்வலர்களின் பதிவுகள் பொதுமக்களிடையே முழுமையாக சென்றடைவதில்லை. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வலிமை, தேசத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்கள் கையில் உள்ளது. அவ்வாறு, மக்கள் பிரச்சனைகளை அறிந்து, அவர்களின் குறைகளை அரசுக்கு எடுத்துக் கூறி, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் செய்தியாளர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை தமிழ் பத்திரிகையாளர்கள் யாரும் பெறவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் புற்றீசல் போல் முளைத்து வணிக ரீதியில் தொடங்கப்படும் ஊடகங்கள் மக்கள் பிரச்சனைகளை பிரதிபலிப்பது குறைந்துகொண்டே வருகிறது என்ற கருத்து, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை உடைத்து, தமிழக பத்திரிகையாளர்களுக்கு பெருமை தேடித்தரும் வகையில், சிறந்த பத்திரிகையாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார் தினமலர் கோவை பதிப்பின் முதன்மை நிருபர் சேவியர் செல்வகுமார். 

தற்போது, தினமலர் நாளிதழில் வெளியான ‘ஒரு நதியைத் தேடி’ என்ற இவரது தொடர் கட்டுரை இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்துள்ளது. தற்போது, ஒட்டுமொத்த தமிழக ஊடகத்துறையும் இவரை கொண்டாடி வருகின்றது. வரும் 16-ம் தேதி தில்லியில் தேசிய விருது பெற உள்ள செல்வகுமார், அவரது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து நம்மிடம் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டம், பந்தலக்குடி என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான் அதே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழி கல்வி பயின்றேன். பின்னர் அரசுக் கல்லூரியில் பொறியியல் பட்டயபடிப்பை  முடித்தேன். கடந்த 1994-ம் ஆண்டு பத்திரிகை ஒன்றின் அச்சுத்துறையில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்தேன். எழுத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து, கோவையில் தினபூமி என்ற செய்தித்தாளில் சிறிது காலம் பணிபுரியும் பொழுது, தினமலரின் முழுநேர நிருபராக பொள்ளாச்சியில் வேலை கிடைத்தது. 

புதுமை புகுத்தல்

முதலில் செய்திகளுக்காக எப்போதும் காவல் நிலையம், அரசு மருத்துவமனை என்று தேடிச்சென்று செய்திகளை சேகரிப்பேன். பேப்பரில் எழுதி முடித்த அந்த செய்திகளை, பொள்ளாச்சியில் இருந்து பேருந்து மூலமாக கோவைக்கு அனுப்பி வைப்பேன். இந்த அன்றாட பணியை விடுத்து சிறப்பு கட்டுரைகளை வழங்கும் வழக்கத்தைக் கொண்டு வந்தது தினமலர் செய்தித்தாள் தான். இதன் வாயிலாக என்னுள் ஒரு தேடலை உருவாக்கிக் கொண்டேன். தனித்துவம் மிக்க செய்திகளை தர தொடங்கினேன். அன்றைய காலகட்டத்தில் பரம்பிக்குளம்- ஆழியார் நதி நீர் பங்கீடு குளறுபடிகள் தொடர்பான தொடர் கட்டுரைகளை எழுதினேன். இதற்காக, கேரளாவிற்குள் சென்று பல சிரமங்களை அனுபவித்து செய்தி மற்றும் படங்களை எடுத்து வந்தேன். இந்த செய்தியால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்தனர். 

பிறகு நீலகிரி மாவட்டத்தில் சுமார் 6 ஆண்டுகள் பணியாற்றினேன். அங்கு பணியாற்றிய போது சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை எழுதினேன். ஊட்டியில் இந்தி படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக புல்வெளிகளை அழித்து செட் அமைத்தனர். பல்வேறு இடையுறுகளையும் மீறி அங்கு சென்று புகைப்படம் எடுத்து செய்தி வெளியிட்டேன். அதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து, அந்த படக்குழுவினருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்ததுடன், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.  

முழு சுதந்திரம் 

இதுபோன்று பல விழிப்புணர்வு செய்திகளை தொடர்ந்து கொடுத்தேன். இதற்கு முக்கிய காரணமாகவும், அடித்தளமாகவும் தினமலர் செய்தித்தாள் இருந்தது. ஏனென்றால் ஒரு பத்திரிகையாளர் நினைப்பதை எல்லாம் வெளியிட அவரின் நிறுவனம் அனுமதிக்குமா? என்பது கேள்விக்குறி தான். தினமலர் நிறுவனம் எங்களுக்கு முழு சுதந்திரம் அளித்தது. உண்மையும், ஆதாரங்களும் இருப்பின் எந்த செய்தியாயினும் வெளியிடும் அளவிற்கு செய்தியாளர்களுக்கு சுதந்திரம் அளித்தது.  

கிராமத்திலிருந்து வந்ததாலேயே, எனக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆர்வம் அதிகரித்ததாக நினைக்கிறேன். அவ்வாறு தான் கவுசிகா நதியை தேடிய எந்தன் பயணம் தொடங்கியது. 

பயணம்

நம் ஊரில் உள்ள குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம், அதுதான் எதிர்கால சந்ததியினருக்கும் உதவும் என்பதை உணர்ந்தே 'ஒரு நதியை தேடி' என்ற தொடர் கட்டுரையை எழுதினேன். இந்த கட்டுரைக்கு ராக் ரவீந்திரன் உட்பட பலரும், பல அமைப்பினரும் எனக்கு உதவினர். ஆக்கிரமிப்புகளால் தொலைக்கப்பட்ட அந்த நதியை தேடி என் குழுவினருடன் 45 கிலோ மீட்டர் தூரம், அதன் மிஞ்சிய பாதையில் நடந்தோம். அதன் விளைவுதான் இந்த கட்டுரை. 

விருது என்பது..!

எனக்கு தேசிய விருது என்பதை விடுத்து, இந்த தேசிய விருது என்பது ஒரு நதி குறித்த கட்டுரைக்கு என்பதில் தான் எனக்கு அதிக மகிழ்ச்சி. இந்த கட்டுரை விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நதியை மீட்டெடுக்க மத்திய அரசு ஒரு தொகையை ஒதுக்க வேண்டும் என்பது எனது விருப்பம். விருது வாங்க செல்லும் நேரத்தில் உயர் அதிகாரிகளிடம் இது குறித்த விண்ணப்பத்தை அளிப்பேன்.

பத்திரிகையாளர் யார்?  

மக்கள் பிரச்சனைகளை அரசிடம் எடுத்துச்சென்று அதற்குத் தீர்வு காண்பவனும், தன்னுடைய எழுத்தால் ஒரு தனிமனித ஒழுக்கத்தை உருவாக்கக் கூடியவனே ஒரு நல்ல பத்திரிகையாளன். இப்போது உள்ள நிலையில் ஊடகத்துறையில் போட்டி நிலவுகிறது. செய்தியை யார் முந்தித் தருவது என்ற போட்டி தான் அது. போட்டி இருக்கலாம், ஆனால் அந்த செய்தி மக்களுக்கு பயனுள்ளவையாகவும், மாற்றத்தை தரக்கூடியதாகவும் இருத்தல் அவசியம். தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை எழுதுவேன். இவ்வாறு அவர் கூறினார். 

கத்தி முனையை விட பேனா முனையே வலிமையானது என்பார்கள். அந்த கூற்றுக்கேற்ப செய்தியாளர்கள் தங்களால் முடிந்த வரை மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைத்தால் வலுவான, வளமான தமிழகம் உருவாகும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...