Govt Notification
வடகிழக்கு பருவமழை: கோவை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அடுத்த மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தலைமையில் நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமாரின் அறிவுறுத்தலின்பேரில், ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய கூட்டரங்கில் (ICCC) அக்டோபர் 19, 2026 அன்று இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பேசுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அடுத்த மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே சம்மந்தப்பட்ட உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வாகனங்கள் அதிகமாக செல்லக்கூடிய முக்கிய சாலைகள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக் கூடிய இடங்களில் மழைநீர் தேங்கினால், அதனை காலதாமதமின்றி அகற்றிட தேவையான இயந்திரங்கள், வாகனங்கள், ஆட்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மழைக்காலத்தில் தெருவிளக்குகள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதனை சம்மந்தப்பட்ட உதவி பொறியாளர்கள் கள ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும் எனவும், மழைநீர் வடிகாலினை ஆய்வு செய்து அடைப்புகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதனை தூர்வாரி சுத்தம் செய்து மழைநீர் தடையின்றி செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மோட்டார், மரம் வெட்டும் இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட உதவி ஆணையாளர்கள் மழைநீர் அதிகம் தேங்க கூடிய இடங்களை தொடர்ந்து கண்காணித்து, மழைநீர் தேங்கும் பட்சத்தில் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மழைநீர் வடிந்த பின் அப்பகுதியில் உள்ள கழிவுகள் மற்றும் குப்பைகளை உரிய முறையில் அகற்றி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவசர காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
அதேபோல், கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும் எனவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாக உள்ளதா என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்திட வேண்டும் எனவும், மழைக்காலத்தில் அலுவலர்கள் தொய்வின்றி தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கன மழையின் காரணமாக சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கி இருந்த மழைநீரினை அப்புறப்படுத்துவது தொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார். மழைநீரை அப்புறப்படுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர், நேற்று பெய்த கனமழையின் காரணமாக மத்திய மண்டலம், மேட்டுப்பாளையம் சாலை, எம்.ஜி.ஆர். மார்க்கெட் பகுதியில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், துணை ஆணையாளர்கள் க.குமரேசன், ர.சரஸ்வதி, மாநகர தலைமை பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் மரு.சுபாஷ்காந்தி, மண்டல உதவி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
