Govt Notification
கோவை மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி சார்பில் மழைநீர் சேமிப்பு, குப்பை தரம் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
SimpliCity News Team · 20 hours ago

Coimbatore: கோயம்பத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.37-க்குட்பட்ட மருதம் நகர் பகுதியில், மழைநீர் சேமிப்பதன் முக்கியத்துவம் மற்றும் நான்கு வகை குப்பை தரம் பிரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தலைமையில் நடைபெற்றது.
கோயம்பத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பதன் முக்கியத்துவம், குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குதல் மற்றும் டெங்கு கொசுப்புழு உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள், ஸ்டிக்கர்ஸ் மற்றும் கோலம், ஓவியம் போன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் (31.10.2026), மேற்கு மண்டலம் வார்டு எண்.37-க்குட்பட்ட மருதம் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, சுருதி ஏஜென்சீஸ் இந்தியன் ஆயில், ஸ்ரீ கோபிகிருஷ்ணா, சின்னசாமி பியூல்ஸ், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றின் சார்பில், சுமார் 100 குடும்பங்களுக்கு குப்பைகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்புக் கழிவு ஆகிய நான்கு வகைகளாக தரம் பிரிப்பதற்கான குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டன.
மாநகராட்சி சார்பில் நடைபெற்ற இந்த மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம், டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் குப்பை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் மரக்கன்றுகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் நர்மதா, செயற்பொறியாளர் ஜெகன், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திரிலோகசுந்தர், உதவி கோட்ட பொறியாளர்கள் ஹரி கிருஷ்ணன், திருராஜா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் கீதா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, எழில், மாமன்ற உறுப்பினர் குமுதம், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் விமலா, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

