Govt Notification
மசக்காளிபாளையம் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வுப் போட்டிகள் – மாணவர்களுக்கு பரிசு வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சுத்தம், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.53-க்குட்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று (19.11.2026) இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகளில் 17.11.2026, 18.11.2026 மற்றும் 19.11.2026 ஆகிய மூன்று நாட்கள் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் பாலின நிபுணர்களால் சுகாதாரம் மற்றும் மாணவர்களது ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வீரியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வடவள்ளி வடக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வடவள்ளி தெற்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது.
இப்பயிற்சியில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எவ்வாறு சுத்தமாக சோப்பு போட்டு கைகழுவுவது பற்றியும், Good Touch, Bad Touch மற்றும் மாதவிடாய் காலத்தில் மனதளவிலும் உடலளவிலும் எதிர்கொள்வது மற்றும் செயல்படுவது போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இப்பொருள் சார்ந்து மாணவ, மாணவிகளின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பின்தேர்வு (Post Test) நடத்தப்பட்டு அவர்களது திறன் பரிசோதிக்கப்பட்டது.
மேலும், மாநகராட்சி மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளியில் 100 மாணவர்கள் மற்றும் 100 மாணவியர் என மொத்தம் 200 பேருக்கு, மழைநீர் சேமிப்பு மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியாக சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நீர்சேமிப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 440 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றனர். சுத்தம், சுகாதாரம் மற்றும் மழைநீர் சேமிப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்து மாணவ, மாணவியர்கள் அறிந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், பாலின நிபுணர்கள் (Gender Experts) விஜயலட்சுமி, வந்தனா சர்மா, பாலமுரளி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


