Govt Notification
கோவை போத்தனூர் பிரதான சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், போத்தனூர் பிரதான சாலையில் விபத்து ஏற்படக்கூடிய இடங்களில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, நெடுஞ்சாலை, மாநகராட்சி, போக்குவரத்து மற்றும் குடிநீர் வழங்கல்துறை அலுவலர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் போத்தனூர் பிரதான சாலை குறிச்சி பிரிவு முதல் செட்டிபாளையம் சாலை வரை விபத்து ஏற்படக்கூடிய இடங்களில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, கட்டா ரவி தேஜா, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் இன்று (20.11.2026) ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்பட்டுள்ளனவா, பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சாலைகள் பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து கட்டா ரவி தேஜா, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சாலைப் பாதுகாப்பு தொடர்பாக (Road Safety) சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்ட பின்னர், பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் காலதாமதமின்றி சாலைகளை உரிய தரத்துடன் சீரமைக்க வேண்டுமெனவும், சாலைகளில் பள்ளங்கள் மற்றும் மேடு பள்ளங்கள் காணப்படும் இடங்களை உடனடியாகக் கண்டறிந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கட்டா ரவி தேஜா சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணம், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்தல் மற்றும் சாலை விபத்துகளைக் குறைத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சாலை சீரமைப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும் எனவும், மேலும், சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்கவும் கட்டா ரவி தேஜா சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் தங்கஅழகர்ராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் (மேற்கு) பிரதீபா, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜாக்குலின் ஜாய் லதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சிவஜோதி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரஞ்சித்குமார், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

