Coimbatore: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதையடுத்து, கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தவெக தொண்டர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
அதிமுகவை நாங்கள் ஒரு போட்டியாக பார்ப்பதில்லை என கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி கனிமொழி சந்தோஷ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி சந்தோஷ், இந்த வெற்றி எதிர்பார்த்த ஒரு வெற்றிதான், எங்கள் தளபதி கால் வைத்து அங்கு வெற்றி காணாமல் இருக்க முடியுமா, அதனால் இந்த மகத்தான வெற்றியை கொண்டாடி வருகிறோம் என்றார். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்றும், சட்டமன்ற தேர்தல் வெற்றி கூட இதயத்திற்கு நெருக்கமான வெற்றியாக பார்க்கவில்லை, தற்போது தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் வெற்றி பெற்றது அவ்வளவு நெகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்தார். இனி தவெகவை அசைக்கவே முடியாது, இனி எல்லாம் விசில்தான் என்று அவர் குறிப்பிட்டார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் அதிக வாக்குகள் வாங்கியுள்ளதாக கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார். அதிமுகவை நாங்கள் ஒரு போட்டியாக பார்ப்பதில்லை, அதையே தற்போதும் கூறுகிறோம் என்றும், அங்கிருந்த எம்.எல்.ஏக்கள் இங்கு வந்துள்ளது நியாயத்தின் பக்கம் நிற்கவே, மேலும் தளபதியின் முகத்திற்காகவே வெற்றி கிடைக்கும், இனி வரக்கூடிய காலகட்டங்களிலும் அதுவே நடக்கும் என்றும் அவர் கூறினார். திமுக இரண்டாவது இடம் பெற்றிருப்பது வளர்ச்சி கிடையாது என்றும், தவெக மற்றும் திமுக விற்கு இடையே மட்டும் தான் போட்டியே, அதைத்தான் இந்த முறையும் நிருபித்துள்ளனர் என்றும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.

