Coimbatore: கோவை தெலுங்குபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என, நிறைமாத கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டனின் மனைவி சாந்தி. இவர்களுக்கு ஏற்கனவே ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது பிரசவத்திற்காக கோவை செல்வபுரத்தில் உள்ள தனது தங்கை வீட்டில் சாந்தி தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் தனது தாய் சுந்தரவல்லியுடன் தெலுங்குபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சாந்தியைப் பரிசோதித்த மருத்துவர், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மருத்துவர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும், அதன் பின்னர் அங்கு இருந்த செவிலியர் மட்டுமே சாந்திக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இரவு 12 மணியளவில் சாந்திக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதுடன், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவர் உடனடியாக வந்து சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் சாந்தி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாந்தியின் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து சாந்தியின் உறவினர்கள் கூறுகையில், ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத சூழலில் செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளரைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும், காலை 11 மணியளவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற கர்ப்பிணி, நள்ளிரவு 2.30 மணியளவில்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறிய உறவினர்கள், உரிய நேரத்தில் மேல் சிகிச்சைக்கு அனுப்பியிருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியுமா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாயை இழந்து தவிக்கும் ஐந்து வயது சிறுமியின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கோவையில் பெரும் சோகத்தையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசரகால மருத்துவச் சேவைகள் முறையாகக் கிடைக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
