News
கோவையில் 9757 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 725 பேர் கைது
SimpliCity News Team · 14 days ago

Coimbatore: கோவை மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக காவல்துறை மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை 9,757 கிலோ 838 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 725 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை, பதுக்கல் மற்றும் சட்டவிரோத விநியோகத்தைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். இச்சோதனைகளின் மூலம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இப்பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் கோவை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மொத்த விவரங்கள் பின்வருமாறு: பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 697 கைது செய்யப்பட்ட நபர்கள்: 725 பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்: 9,757 கிலோ 838 கிராம் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்ட கடைகள்: 234 மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை தொடர்பான விதிமுறைகளை மீறும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் இதுவரை 234 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது அல்லது பதுக்கி வைக்கப்படுவது குறித்து தகவல் அறிந்தால், உடனடியாக காவல்துறையினருக்குத் தெரிவித்து, இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பதில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை மற்றும் சட்ட நடவடிக்கைகள் கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.