News
கோவையில் வனவிலங்கு வேட்டை வெடிகுண்டு வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
SimpliCity News Team · 13 days ago

Coimbatore: கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம், பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வெடி பொருட்களும் அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டும் வைத்திருந்த வழக்கில் ரங்கன் @ ரங்கசாமி என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ரங்கன் மீது 2020 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் பேரூர் காவல் நிலையத்தில் இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தப்படும் வெடிமருந்து பொறிகளையும் அவுட்டுக்காய் நாட்டு வெடிகுண்டுகளையும் வைத்திருந்ததாக இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்விரு வழக்குகளும் கோவை குண்டுவெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று, அதாவது 09.10.2026 அன்று, இவ்விரு வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்பட்டு, ரங்கனுக்கு மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக்குகளில் முறையாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணையின்போது சாட்சிகளை உரிய முறையில் ஆஜர்படுத்தி, வழக்குகளின் விசாரணை சிறப்பாக நடைபெற உறுதுணையாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகத்தின் பணியைப் பாராட்டி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுத் தெரிவித்தார். குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் சிறப்பாகப் பணியாற்றும் காவல்துறையினரின் அர்ப்பணிப்பையும் கடமை உணர்வையும் கோவை மாவட்ட காவல்துறை பாராட்டுகிறது.