News
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு: இன்று சுற்றுலா பயணிகளுக்குத் தற்காலிகத் தடை
SimpliCity News Team · 13 days ago

கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று (10.10.2026) ஒரு நாள் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவிக்கு (Kovai Kutralam Falls) சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், சிறுவாணி அடிவார அருவிப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் நேற்று மாலையில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, எந்தவித விபத்துகளும் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு இன்று (10/10/2026) ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது என கோவை வனக்கோட்டம் (Coimbatore Forest Division) தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைப் பகுதியில் மழை நின்ற பிறகு, நீர்வரத்து சீரானதும் மீண்டும் அருவிக்குச் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, சுற்றுலா பயணிகள் யாரும் கோவை குற்றாலம் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.