News
கோவையில் 195 வழக்குகளில் பறிமுதல் செய்த 1,934 மதுபாட்டில்கள் அழிப்பு
SimpliCity News Team · 13 days ago

Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 195 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,934 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி, IPS அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் நடைபெறும் சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 195 வழக்குகளில், பேரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட 1,934 மதுபாட்டில்கள், தேவையான நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்று, சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி அழிக்கப்பட்டன.
குறிப்பிட்ட நடைமுறைகளின்படி நடைபெற்ற இந்த அழிப்பு நடவடிக்கையை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் தங்கம் மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது கலால் பிரிவு கோட்ட அலுவலர் மோகன் பாபு மற்றும் கலால் வட்டாட்சியர் அலமேலு மங்கை ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.
சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பான தகவல்களை காவல்துறையினரிடம் தெரிவித்து, சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.