News
கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு
SimpliCity News Team · 13 days ago

Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று அணைகளிலும் அக்டோபர் 10ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் அக்டோபர் 10ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் 53.15 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 163 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 129 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து ஏற்பட்டு, அக்டோபர் 10ஆம் தேதி இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 57.45 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 537 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 34 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வால்பாறையில் உள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் அக்டோபர் 10ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் 73.13 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 215 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 756 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.