News
கோவை மத்திய சிறைக்குள் ஆசனவாயில் கஞ்சா கடத்திய கைதி பிடிபட்டார்!
SimpliCity News Team · 6 hours ago

Coimbatore: கோவை மத்திய சிறையில் ஆசனவாயில் கஞ்சா மறைத்து கடத்த முயன்ற கைதி ஒருவர் சிறைக் காவலர்களிடம் பிடிபட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி மேலத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25), தந்தை பெயர் பெருமாள். கஞ்சா வழக்கில் கைதான இவர், கோவை மத்திய சிறையில் 15-வது பிளாக்கில் உள்ள 20-வது அறையில் நீதிமன்றக் காவல் கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார். இவர் மீது குண்டர் தடுப்பு காவல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நேற்று திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விட்டு சுரேஷ் மீண்டும் கோவை சிறைக்கு அழைத்து வரப்பட்டார். சிறை நுழைவு வாயிலில் சிறைக் காவலர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, சுரேஷ் தனது ஆசனவாயில் பச்சை நிற காகிதத்தில் பொட்டலமாகச் சுற்றி மறைத்து வைத்திருந்த 23.58 கிராம் கஞ்சாவை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மத்திய சிறை ஜெயிலர் கே. திருமலை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.