News
கோவை சரவணம்பட்டியில் சேவல் சண்டை சூதாட்டம்: இருவர் கைது, 3 சேவல்கள் பறிமுதல்
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: சரவணம்பட்டி அத்திப்பாளையம் சந்திப்பு பகுதியில் சேவல் சண்டை வைத்து பணம் பறிமுதல் சூதாட்டம் நடத்திய இருவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கோவை, சரவணம்பட்டி அத்திப்பாளையம் சந்திப்பு பகுதியில் சேவல்களை மோதவிட்டு பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேசன் சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் மற்றும் போலீசார் வாரச்சந்தை அருகே உள்ள காலி நிலத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின்போது சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கோவை, கணபதி பதிகவுண்டர் தோட்டம் 4-வது வீதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சதீஷ் (29) மற்றும் துடியலூர் ரோடு நேரு வீதி ஆர்.எஸ். தோட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் ரஞ்சித் (34) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்தனர்.
சதீஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோரிடமிருந்து சண்டைக்காக பயன்படுத்தப்பட்ட 3 சேவல்கள் மற்றும் பந்தயப் பணம் ரூ.3,700 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் சூதாட்ட சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதான சதீஷ் மற்றும் ரஞ்சித் பின்னர் போலீஸ் ஸ்டேசன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.