News
கோவை காந்திபுரத்தில் ஓடும் பேருந்தில் ஏற முயன்ற வால்பாறை தொழிலாளி உயிரிழப்பு
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் ஓடும் பேருந்தில் ஏற முயன்ற வால்பாறை தொழிலாளி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை உருளிகல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து மகன் மாரிமுத்து (வயது 54) என்ற தொழிலாளி, நேற்று முன்தினம் அதிகாலை 1 மணி அளவில் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் திருப்பூர் செல்லும் பேருந்து நிற்கும் பகுதி நுழைவாயில் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற பேருந்தில் அவர் அவசரமாக ஏற முயன்ற போது நிலைதடுமாறி நடைமேடையில் கீழே விழுந்தார்.
இதில் மாரிமுத்துவுக்கு தலையின் பின்பகுதியில் பலத்த ரத்தக் காயமும், இடது கால் மற்றும் முழங்காலில் சிராய்ப்புக் காயங்களும் ஏற்பட்டு அவர் உயிருக்கு போராடினார். உடனே அங்கு இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதிகாலை 1.30 மணியளவில் மாரிமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி அங்கம்மை (48) அளித்த புகாரின் பேரில், கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் ஸ்டேசன் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.