News
கோவையில் பெரியார் அறிவுலகம் அரசு விடுமுறை நாட்களில் மூடல்: சுப. வீரபாண்டியன் கண்டனம்
SimpliCity News Team · 12 hours ago

Coimbatore: கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம், அரசு விடுமுறை நாட்களான நேற்று மற்றும் இன்று மூடப்பட்டிருந்ததால், இதனை அறியாமல் பார்வையிட வந்த பல பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், எழுத்தாளர் கவுதமன் உள்ளிட்ட அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பெரியார் அறிவுலகத்திற்கு வருகை புரிந்தனர். அப்போது, அரசு விடுமுறை நாட்களில் பெரியார் அறிவுலகம் மூடப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அதேசமயம், பெரியார் அறிவுலகத்தை அமைக்கக் காரணமாக இருந்த திமுக அரசையும், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் வாழ்த்தி முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், பெரியார் அறிவுலகத்தை யார் திறந்து வைத்தார்கள் என்பதைவிட, யார் இதனை உருவாக்கினார்கள் என்பதுதான் வரலாற்றில் இடம்பெற வேண்டிய குறிப்பு என்றும், இந்த அறிவுலகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் நண்பர்களுடனும் குழந்தைகளையும் அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார். விடுமுறை நாள் என்பதால் நீண்ட நேரம் பார்வையிடலாம் என்று எண்ணியிருந்ததாகவும், ஆனால் நவராத்திரி, விஜயதசமி ஆகியவற்றைக் காரணம் காட்டி அறிவுலகம் மூடப்பட்டிருப்பது, இந்த அரசு எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நூலகங்கள் விடுமுறை நாட்களில்தான் திறக்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் அனைவரும் வந்து படிப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அனைவரும் படித்துவிடுவார்களோ என்று அரசு அச்சப்படுகிறதா என்று தெரியவில்லை எனவும், இந்த நிகழ்வு அறிவுலகத்திற்கு எதிரானதாக உள்ளது எனவும் கூறிய அவர், மூடநம்பிக்கையின் அடிப்படையில் அறிவுலகம் மூடப்பட்டிருப்பதை வேதனையுடன் பதிவு செய்வதாகத் தெரிவித்தார். விடுமுறை நாட்களிலும் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைக்க வேண்டும் எனவும், குழந்தைகளுக்குப் பயன்படக்கூடிய இந்த அறிவுலகத்திற்குத் தடையாக இருக்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பெரியார் அறிவுலகம் நூலகத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அரசு விடுமுறை நாட்களில் மூடப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளதாகச் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த வீரபாண்டியன், இதற்கு விளக்கம் தேவையில்லை என்றும், மக்களுக்கு எது பயன்படும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதையே வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் எது பயன்பட வேண்டும் என்பதுதான் முதன்மையானது என்றும், எப்படி வேண்டுமானாலும் விளக்கம் கூறலாம் என்றும் அவர் கூறினார். ஆனால், விளக்கத்திற்காக அல்ல மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக விடுமுறை நாட்களிலும் பெரியார் அறிவுலகம் திறந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.


