News
"முதல்வர் விஜய் வைரக்கல்" - சென்னையில் திமுக கவுன்சிலர் பேசியது குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார் பதிலடி
SimpliCity News Team · 8 hours ago

Coimbatore: கோவையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஆனந்த சாயிபாபா கோவிலில் நடைபெற்ற 108 ஜீவ சமாதி விழாவில் அமைச்சர் சம்பத்குமார் பங்கேற்று, சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கெனவே அதிகாரிகளுடன் திட்டமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால், பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் தடுக்க முடிந்ததாகக் கூறினார்.
மழை பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் கடுமையாகப் பேசிய வீடியோ குறித்த கேள்விக்கு, சில பகுதிகளில் சாக்கடைகள் தூர்வாரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், பொதுமக்கள் அங்கு தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை எனக் கூறியதால், தவறான தகவல் அளித்த அதிகாரிகளிடம் கடுமையாகப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக திமுக அரசு ரூ.4,000 கோடி செலவு செய்ததாகக் கூறியபோதிலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என அவர் விமர்சித்தார். அதேநேரத்தில், முதல்வரின் திட்டமிடல் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் சென்னையில் மழைப் பாதிப்புகளைச் சீரமைக்க முடிந்ததாகத் தெரிவித்தார். மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட பிரச்சினைகளும் சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்புடன் சரிசெய்யப்பட்டதாகக் கூறினார்.
மேலும், ஆபத்தான நிலையில் உள்ள மரங்களைக் கண்காணித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மருதமலை சாலையில் முறையான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைக்குப் பிறகு பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். மக்கள் வரிப்பணம் வீணாகாமல், மதிப்பீட்டுத் தொகையைவிட 25 முதல் 30 சதவீதம் குறைவான ஒப்பந்தப்புள்ளிகள் கிடைப்பதாகக் கூறிய அவர், குறைந்த செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தரத்தில் சமரசம் செய்யப்படாது என்றும், நான்கு அடுக்குகளாகத் தார் சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கோவை நூலகக் கட்டிடத்தில் திமுகவினர் முழக்கமிட்டது குறித்துப் பேசிய அமைச்சர், திமுகவினர் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுவதாகவும் கூறினார். தங்களது தொண்டர்களுக்கு திமுக தலைவர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கோவையில் முதல்வர் விஜய் பேசாதது குறித்த கேள்விக்கு, முதல்வர் எப்போது பேச வேண்டுமோ அப்போது பேசுவார் என்றும், செயல்படுவதையே குறிக்கோளாகக் கொண்டு அவர் திட்டங்களை வழங்கியுள்ளார் என்றும் பதிலளித்தார். மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டு முதல்வரை வரவேற்றதாகவும், மக்கள் சக்தி கொண்ட முதல்வரை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் கூறினார்.
சென்னையில் திமுக பெண் கவுன்சிலர் பேசியது குறித்த கேள்விக்கு, முதல்வர் வைரம்தான் எனவும், கண்ணாடிக் கற்களால் அவருக்கு எதுவும் செய்ய முடியாது எனவும் பதிலளித்தார்.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கார்த்திகா கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு, பழிவாங்கும் நடவடிக்கை தங்கள் அரசுக்குத் தேவையில்லை எனவும், கார்த்திகாவின் செயல்பாடுகள் தொடர்பாகவே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும், இதில் பழிவாங்கும் நோக்கம் இல்லை எனவும் அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்.