News
கோவை மருதமலை கோயிலில் கனமழையால் குளம் போல் தண்ணீர் தேக்கம்: பக்தர்கள் அவதி
SimpliCity News Team · 7 hours ago

Coimbatore: கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் கனமழையால் தண்ணீர் தேங்கி, சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானனர்.
கோவை மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். குறிப்பாக, செவ்வாய்க்கிழமை என்பதால் இன்று கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்தச் சூழலில், மாலை நேரத்தில் பெய்த கனமழையால் கோயில் வளாகத்தில் மழைநீர் பெருமளவில் தேங்கியது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழைக்கே, கோயில் வளாகம் முழுவதும் குளம்போல் காட்சியளித்தது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் தேங்கிய மழைநீரைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோயில் வளாகத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கிய நிலையில், பக்தர்கள் தண்ணீருக்குள் நடந்து செல்லும் சூழல் உருவானது. குறிப்பாக, குழந்தைகளுடன் வந்தவர்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீரைக் கடந்து சென்றனர்.
மழைநீர் தேங்கியதால், பக்தர்கள் அச்சத்துடனும் சிரமத்துடனும் கோயில் வளாகத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், மழைக்காலங்களில் கோயில் வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், ஏற்கெனவே உள்ள வடிகால் வசதிகளைச் சீரமைத்து, மழைநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

