News
கோவை மாணவர் அகிலன் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
SimpliCity News Team · 21 hours ago

Coimbatore: கோவையில் 11-ம் வகுப்பு மாணவர் அகிலன் உயிரிழந்த வழக்கின் விசாரணையை, பெற்றோரின் கோரிக்கையை ஏற்று காவல்துறை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றியுள்ளது. இதனிடையே, அகிலனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மாணவரின் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, அகிலனின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறாவது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என அகிலனின் பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். காவல்துறையின் விசாரணை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், எனவேதான் சிபிசிஐடி விசாரணைக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பெற்றோரின் கோரிக்கையை ஏற்றுக் காவல்துறை, மாணவர் அகிலன் உயிரிழந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தனது மகனின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, அவருக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என அகிலனின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, மாணவர் அகிலனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்காக அகிலனின் தந்தை, காவல்துறையினருடன் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
இருப்பினும், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே மகனின் உடலைப் பெற்றுக்கொள்வது குறித்து முடிவெடுப்போம் எனப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய அகிலனின் தாய் கௌசல்யா தேவி, தனது மகனின் உயிரிழப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும், தனது மகனுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், அவர் சென்ற இடத்திற்குத் தானும் சென்றுவிடுவேன் எனக் கூறி வேதனையை வெளிப்படுத்தினார். அவரது இந்த உருக்கமான பேச்சு அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
மாணவர் அகிலனின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விசாரணையின் மூலம் உண்மைகள் வெளிவந்து, தங்களது மகனுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர் காத்திருக்கின்றனர்.


