News
பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் மலைவாழ் மக்களுக்கு சட்ட உதவி மையம் திறப்பு, சான்றிதழ் வழங்கல்
SimpliCity News Team · 13 hours ago

Coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆனைமலை தாலுக்கா டாப்ஸ்லிப் பகுதியில் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம், புதிய சட்ட உதவி மையம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அக்டோபர் 25, 2026 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 54 பேருக்கு சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ரேஷன் அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டன.
தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் SAMVAD - மலைவாழ் பழங்குடியினர் மற்றும் இதர மக்களுக்கான நல உரிமைகள் மற்றும் இதர சட்ட உரிமைகள் பெறும் திட்டத்தின் படியும், தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் படியும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், கோவை மாவட்ட நிர்வாக பொறுப்பு நீதிபதியுமான நீதியரசர் பி.வேல்முருகன் தலைமை வகித்தார்.
முன்னதாக, நீதியரசர் பி.வேல்முருகன் கோழிகமுதி பகுதியில் அமைக்கப்பட்ட புதிய சட்ட உதவி மையத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவரையும் பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வரவேற்றார். தொடர்ந்து பேசிய சார் ஆட்சியர் ராமகிருஷ்ண சாமி கோவை மாவட்ட நிர்வாகத்தில் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் குறித்து பேசினார்.
அவரை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவேந்திர குமார் மீனா மலைவாழ் மக்களுக்கு அமைத்து தரப்பட்ட தொழில் வாய்ப்புகள் குறித்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய மாவட்ட நல அலுவலர் பால் சாமி மலைவாழ் மக்களுக்கு மருத்துவ திட்டங்கள் குறித்தும் பேசினார். பிறகு சிறப்புரையாற்றிய தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான J. ஸ்ரீதேவி மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ள சட்ட உரிமைகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து தலைமையுரையாற்றிய நீதியரசர் பி.வேல்முருகன் இந்திய வன உரிமை சட்டம் குறித்தும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் SAMVAD திட்டத்தின் கீழ் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பெறக்கூடிய உதவிகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து அவர் டாப்ஸ்லிப் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள புதிய சட்ட உதவி மையத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, மலைவாழ் மக்களுக்கு பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் மனுதாக்கல் செய்து பெறப்பட்ட சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ரேஷன் அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றை 54 பேருக்கு அவர் வழங்கினார்.
விழாவின் ஒரு பகுதியாக மலைவாழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட மருத்துவ முகாமை நீதியரசர் பார்வையிட்டார். தொடர்ந்து, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதியுமான R.ட.குரு லக்ஷ்மி நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட நீதிபதிகள், வருவாய் துறை அலுவலர்கள், வனதுறை ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள், கோழிக்கமுதி மற்றும் டாப்ஸ்லிப் பகுதி மலைவாழ் மக்கள், சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பங்குபெற்றனர். இவ்வாறு கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.


