News
நெகமம்: பொது இடத்தில் மது அருந்திய 17 பேர் ட்ரோன் கேமரா மூலம் பிடிபட்டனர்
SimpliCity News Team · 18 hours ago

Coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் பகுதியில் டாஸ்மாக்கில் மது வாங்கி திறந்த வெளியில் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த 17 பேரை பெண் காவல் ஆய்வாளர் மசூதா பேகம் தலைமையிலான போலீசார் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்டறிந்து பிடித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொது இடங்களில் கும்பல் கும்பலாக அமர்ந்து மது அருந்தி விட்டு அவ்வப்போது சட்டவிரோத செயல்களில் சிலர் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதை அடுத்து பெண் காவல் ஆய்வாளர் மசூதா பேகம் தலைமையிலான போலீசார் நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதுபோன்று பொது இடங்களில் மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவோரை கண்டறிய ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியை தொடங்கினர்.
அதன் பயனாக நெகமம் பகுதியில் ஐந்து இடங்களில் குடிமகன்கள் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டறிந்து அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து பொது இடங்களில் மது அருந்துதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மது அருந்திவிட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாகவும் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ட்ரோன் கேமரா மூலம் பொது இடத்தில் மது அருந்துபவர்களை காவல்துறையினர் மடக்கி பிடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.