News
கோவைப்புதூரில் சேவல் சண்டை சூதாட்டம்: 2 பேர் கைது, 2 சேவல்கள் பறிமுதல்
SimpliCity News Team · 17 hours ago

Coimbatore: கோவை மாவட்டம், கோவைப்புதூர் டி பிளாக் ரேஷன் கடை பின்புறம் உள்ள திறந்தவெளி மைதானத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 2 வாலிபர்களை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 உயிருள்ள சண்டைச் சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.
கோவைப்புதூர் டி பிளாக் ரேஷன் கடை பின்புறம் உள்ள திறந்தவெளி காலி மைதானத்தில் சிலர் சட்டவிரோதமாக சேவல்களை மோதவிட்டு பணம் வைத்து சூதாடுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேசன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகளைக் கட்டி ஆக்ரோஷமாக மோதவிட்டு, அதைச் சுற்றி நின்று பந்தயப் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் பேரூர் சுண்டக்காமுத்தூர் ரோடு வாய்க்கால்பாளையத்தைச் சேர்ந்த மருதாசலம் மகன் வரதராஜன் (31) மற்றும் குளத்துப்பாளையம் நேதாஜி நகரைச் சேர்ந்த குமார் மகன் ஹரிதாஸ் (26) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 உயிருள்ள சண்டைச் சேவல்களை போலீசார் பத்திரமாக பறிமுதல் செய்தனர்.
இதை அடுத்து வழக்குப் பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார், வரதராஜன் மற்றும் ஹரிதாஸ் ஆகிய இருவரையும் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.