News
கோவையில் அரசு விரைவுப் பேருந்து மோதி சத்தீஸ்கர் இளைஞர் படுகாயம்
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை ஆர்.ஜி. புதூர் அவினாசி ரோட்டில் சாலையைக் கடந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் மீது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ் மோதி படுகாயம் அடைந்த சம்பவத்தில், அவர் தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டம் ஜடமுடா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் தாஸ். இவருடைய மகன் வில்சன் தாஸ் (வயது 23). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த சாவ் பர்ஹா மகன் முகில் குமார் பர்ஹா. இவர்கள் இருவரும் வேலை விஷயமாக கோவைக்கு வந்து ஆர்.ஜி. புதூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
சம்பவத்தன்று மாலை முகில் குமார் பர்ஹா, அவினாசி ரோடு ஆர்.ஜி. புதூர் டவுன் கடை அருகே சாலையை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நிதானமாகக் கடக்க முயன்றார். அப்போது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி திருப்பூர் வழியாக கோவை மத்திய பேருந்து நிலையம் நோக்கி அதிவேகமாக வந்த அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ், கண் இமைக்கும் நேரத்தில் சாலையைக் கடந்த பாதசாரி முகில் குமார் பர்ஹா மீது மிக பயங்கரமாக மோதியது. அந்த பஸ்சை சேலம் மாவட்டம் எடப்பாடி புல்லம்பட்டி கருமக்கவுண்டன் வலசைச் சேர்ந்த மாடைய கவுண்டர் மகன் கண்ணன் (51) என்பவர் அசுர வேகத்திலும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் பஸ் மோதிய வேகத்தில் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட முகில் குமார் பர்ஹாவின் தலையின் பின்பகுதியிலும், வலது பக்க நெஞ்சுப் பகுதியிலும் பலத்த உட்காயங்கள் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் துடிதுடித்த முகில் குமார் பர்ஹாவை நண்பர் வில்சன் தாஸ் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து வில்சன் தாஸ் அளித்த புகாரின் பேரில், விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் கண்ணன் மீது போக்குவரத்து புலனாய்வு கிழக்கு போலீஸ் ஸ்டேசன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.