News
கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு 2-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் பூசணிக்காய் வைத்து நூதனப் போராட்டம்
SimpliCity News Team · 15 hours ago

Coimbatore: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைதியான முறையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பூசணிக்காய் வைத்து நூதன முறையில் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
மாநகராட்சி அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் இப்போராட்டம் நடத்தப்படுகிறது. தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள், டி.பி.சி. பணியாளர்கள், மலேரியா தடுப்புப் பணியாளர்கள், சாக்கடை சுத்தம் செய்யும் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள் உள்ளிட்ட நீண்டகாலமாகப் பணிபுரியும் அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பது முதன்மை கோரிக்கையாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியின்படி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், 2017ஆம் ஆண்டு அரசாணையின்படி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.798 ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. இதனுடன், டி.பி.சி. பணியாளர்களைத் தனியார் தன்னார்வ அமைப்பிடம் ஒப்படைக்கும் மாநகராட்சி மன்றத் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் அறிவித்த அறிவிப்பு மறைக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, பணியாளர்கள் பூசணிக்காயை வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாநகராட்சி நிர்வாகம் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று பணியாளர்கள் வலியுறுத்தினர். சுமுகத் தீர்வு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாகக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. கூட்டமைப்பில் இல்லாத பணியாளர்கள் மட்டுமே தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வழக்கத்தைவிடக் குறைவான பணியாளர்களே பணியில் ஈடுபட்டுள்ளதால், மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டு, தொய்வுடன் நடைபெற்று வருகின்றன.
