News
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக செய்த அதே தவறை தவெக செய்வது ஏற்புடையதல்ல – கோவையில் அண்ணாமலை விமர்சனம்
SimpliCity News Team · 7 days ago

கோவை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என வி தி லீடர்ஸ் (We the Leaders) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை கோவையில் வலியுறுத்தினார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, முருக பக்தர்களுக்கும் தமிழர்களுக்கும் சூரசம்ஹார வாழ்த்துகளைத் தெரிவித்த பிறகு, திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசினார். உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏற்புடையதோ, இல்லையோ, அதனைப் பின்பற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அரசியலில் இருப்பவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியல் களத்தில் இருந்தபோதும், தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும் மௌனம் காத்து வருவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மத நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று தெரிவித்த அவர், திமுக அரசு கடவுள் மறுப்புக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் அதே அணுகுமுறையைப் பின்பற்றுவது ஏற்புடையதல்ல என்றார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மாநில அரசே தேவையற்ற பகைமை உணர்வையும் பதற்றத்தையும் உருவாக்கி வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், நீதிமன்றத் தீர்ப்பின்படி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் 35 நாட்களைக் கடந்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியாதது குறித்துப் பேசிய அண்ணாமலை, குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் முதலமைச்சர், இந்த வழக்கிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்திலும் முதலமைச்சர் மௌனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.