News
மேட்டுப்பாளையம் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாற்றுத்திறனாளியான இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் மொத்தம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியைச் சேர்ந்த ஜோஹி என்பவரின் மகன் குமார் (45), 01.07.2024 அன்று மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாற்றுத்திறனாளியான இளம் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு கோவை மாண்புமிகு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்று (19.11.2026) நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இந்த வழக்கில் விரைந்து நீதி கிடைக்க உறுதுணையாக இருந்த புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக செய்த தலைமை காவலர் 493 சந்திரமோகன் ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி, IPS பாராட்டினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என கோவை மாவட்ட காவல்துறையால் கடுமையாக எச்சரிக்கப்பட்டது.