News
கோவை சலவநாயக்கன்பட்டி புதூர் மகாசக்தி மாசாணியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நவம்பர் 22-ல் நடைபெறுகிறது
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை சலவநாயக்கன்பட்டி புதூரில் உள்ள அருள்மிகு மகாசக்தி மாசாணியம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் நவம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில் அம்மனின் அருளாலும் உத்தரவின்படியும் புதிதாகப் பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சலவநாயக்கன்பட்டி புதூர் மகாசக்தி மாசாணியம்மன் அப்பகுதி மக்களின் நம்பிக்கைக்குரிய தெய்வமாக விளங்கி வருகிறார். இக்கோவிலில் அம்மனுக்குப் பூஜை செய்யப்பட்ட பச்சைத் தண்ணீரை எடுத்துச் செல்வதன் மூலம் நோய் நொடிகள் மற்றும் தீய பாதிப்புகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதேபோல், பசு மாட்டின் வெண்ணெயை அம்மனிடம் வைத்து வழிபட்டுப் பெற்றுச் செல்வதால் கால்நடைகளுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படாமல் அம்மன் பாதுகாப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரு நாட்களும் சிறப்பு அன்னதானம் நடைபெற உள்ளது. ஆல் இந்தியா தமிழன் அறக்கட்டளை (தாராபுரம்) சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், நான்கு கால யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இதுகுறித்து செஞ்சேரிமலை அருள்மிகு மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோவிலில் ஸ்தானீகமாகப் பணியாற்றும் சென்னியங்கிரீஸ்வர சுப்பிரமணியம் கூறுகையில், சலவநாயக்கன்பட்டி புதூர் கிராமம் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான 68 கிராமங்களில் ஒன்றாகும் என்றார்.
இறையருளால் நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு அம்மனின் திருவருளைப் பெற்று விழாவைச் சிறப்பிக்க வேண்டும் என்றும் சென்னியங்கிரீஸ்வர சுப்பிரமணியம் அழைப்பு விடுத்தார்.

