News
தவெக ஆட்சியைக் கவிழ்க்க அதிமுக முயற்சி தேவையில்லை, அவர்களது தோல்விகளே போதும் - கோவையில் எடப்பாடி பழனிசாமி
SimpliCity News Team · 1 day ago

கோவை: தவெக ஆட்சியைக் கவிழ்க்க அதிமுக தனியாக முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், அரசின் நிர்வாகத் தோல்விகளே போதுமானவை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகள், தொழில் முதலீடுகள், சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம், காவிரி நீர் விவகாரம், மின்சாரக் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினார்.
தமிழகத்தில் தற்போது தெளிவான நிர்வாகம் இல்லை என்றும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்திற்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாகக் குறிப்பிட்ட அவர், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அரசின் நிர்வாகத் தோல்விகளால் தானாகவே ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று விமர்சித்த அவர், தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகக் குறிப்பிட்டு, போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காவிரி விவகாரம் குறித்துப் பேசிய அவர், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீரைப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். கர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெறுவதில் முதலமைச்சருக்கு போதிய அக்கறை இல்லை என்றும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய தண்ணீரைப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மின்சாரக் கொள்முதல் தொடர்பாகப் பேசிய அவர், கடந்த காலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்பட்டதையே ஊழல் எனக் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது ரூ.37-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஊழல் நடைபெற்றிருக்காதா எனக் கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்குப் பிறகே முழுமையாகக் கருத்துத் தெரிவிக்க முடியும் என்ற அவர், தமிழக அரசு நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை முறையாக முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அக்கட்சி இன்னும் முறையான அமைப்பாகக்கூட உருவாகவில்லை என்றும், அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.
எஸ்.பி. வேலுமணி மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் திருமண விழாவில் ஒன்றாக இருந்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அந்த வீடியோவைப் பார்த்து செய்தியாளர்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றார். மேலும், எஸ்.பி. வேலுமணி அதிமுகவின் பல கோடி தொண்டர்களில் ஒருவர்தான் என்றும், அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டு கேள்விகளை எழுப்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
கட்சியை விட்டு விலகியவர்கள், கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து திமுகவிடம் ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்றும், எப்போதும் அதிமுகவினரிடமே தொடர்ந்து கேள்வி எழுப்புவது ஏன் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
