News
10 மாத சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி கோவையில் கட்டிடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
SimpliCity News Team · 10 min ago

கோவை: கோவை சுந்தராபுரம் மதுக்கரை சாலை காமராஜபுரத்தில், 10 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை அவினாசி சாலைப் பகுதியைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 10 மாதங்களாக அங்கேயே தங்கிப் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு கடந்த 10 மாதங்களாகச் சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
நிலுவையில் உள்ள சம்பளத்தைக் கேட்ட தொழிலாளர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாகச் சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் கடிதம் அனுப்பியும் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கண்டித்தும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 10 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் காமராஜபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத் தலைவர் இரா. மணி என்கிற பொன் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் பால்ராஜ், மகளிர் அணித் தலைவி ஷாலினி, துணைத்தலைவி ஜான்சி ராணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் பிரச்சினையில் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அவ்வாறு தீர்வு காணத் தவறினால், சம்பளப் பட்டுவாடா சட்டத்தின் கீழ் தொழிலாளர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.