தொழில் மற்றும் கல்வி தேவைக்காக வந்து செல்ல வசதியாக கோவை - பெங்களூரு இடையே இரவு நேரங்களில் ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோவை மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையை செயல்படுத்தாமல் தென்னக ரயில்வே நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை: கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் இருந்து சென்னை, நெல்லை மும்பை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கோவையில் இருந்து சென்னைக்கு சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கோவை - பெங்களூரு இடையே ஒரே ஒரு பகல் நேர உதய் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூருக்கு 3 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஏராளமான தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் உள்ளன. எனவே தொழில் மற்றும் கல்வி தேவைக்காக வந்து செல்ல வசதியாக கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளாக கோவை தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தென்னக ரயில்வே நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே பயணிகள் சங்க நிர்வாகி ஜெயராஜ் கூறியதாவது
கோவை - பெங்களூரு இடையே இயக்கப்பட்ட ஐலண்டு எக்ஸ்பிரஸ், கோவை-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது கேரள மாநிலத்தில் இருந்து இயக்கப்படுகிறது. எனவே கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று கோவை வர்த்தக அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இரவு நேர ரயிலுக்கு பதிலாக இரண்டடுக்கு பகல் நேர உதய் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் விடப்பட்டது.
கேரளாவில் இருந்து கோவை வழியாக செல்லும் ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதால், கோவையில் யாரும் ஏற முடிவது இல்லை. இதை - பயன்படுத்தி கோவை - பெங்களூரு இடையே ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக ஆம்னி பஸ்கள் மட்டும் கோவை- பெங்களூரு இடையே தினமும் 90 ஆம்னி பஸ்கள் வரை இயக்கப்படுகிறது. இதில் கட்டணமாக, ரூ.1,300 முதல் ரூ.1,700 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது.
பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கள் தவிர்த்து 6 தமிழக அரசு பஸ்கள், 6 கர்நாடகா அரசு பஸ்கள், 3 கேரளா அரசு பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கப்படுகிறது.
கோவையில் இருந்து பெங்களூருக்கு ரயில் விட முடியாது என்றால் கர்நாடகாவின் வட மாவட்டங்களில் உள்ள சிமோகா, சித்ரதுர்கா, தார்வார், பெல்காம், பெல்லாரி போன்ற எதாவது ஒரு நகரத்திற்கு இரவு நேர ரயில் விடலாம் அல்லது பெங்களூருவில் இருந்து அதிகாலையில் சிமோகா, கடாக் செல்லும் ரயில்களில் ஒன்றை கோவையில் இருந்து புறப்படச் செய்யலாம்.
கர்நாடகாவின் வட மாவட்ட நகரங்களுக்கும் கோவைக்கும் வர்த்தகம் மற்றும் விவசாய ரீதியாக நீண்ட நாட்களாக நல்ல தொடர்பு உள்ளது. இரு மாநில மக்களின் நலன் கருதி உடனடியாக கோவை பெங்களூரு இடையே இரவு நேர ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.