கோவையில் தமாக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் தவிர்த்தது அரசியல் காரணங்களால் மட்டுமே என்று குற்றம்சாட்டினார். மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்க தவறியதாகவும் விமர்சித்தார்.
கோவை: கோவை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஜி.கே.வாசன் பேசுகையில், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 2026 தேர்தல் வியூகத்தின் அடிப்படையில், இயக்கத்தில் பொறுப்புகளில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட தலைமை என மாற்றி மறு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்," என்றார்.
மறுசீரமைப்பில் கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மகளிர்க்கும் இளைஞர் அணியில் முக்கிய பதவிகள் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதி ஆயோக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த வாசன், "தமிழகத்தில் உள்ள பல்வேறு குறைகளை நிறைவாக்குவார் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதல்வருக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் துரதிஷ்டவிதமாக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிய தமிழக முதல்வராக உள்ளார்," என்று குற்றம்சாட்டினார்.
"நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் அமர்ந்து நேரடியாக கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கின்றனர். நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்த்ததற்கு காரணம் அரசியல் வாக்கு வங்கி தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை," என்று அவர் விமர்சித்தார்.
மேலும், "நிதி ஆயோக் கூட்டம் என்பது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடக்கக்கூடிய ஒன்று. அதில் தமிழகத்தின் அழுத்தமான ஆலோசனைகளை, தேவைகளை எடுத்து கூறக்கூடிய ஒரே பிரதிநிதி முதல்வராகத்தான் இருக்க முடியும். அதை அவர் செய்ய தவறிருக்கிறார். இதில் அரசியல் செய்ய கூடாது. நிதி ஆயோக்கில் அரசியல் தேவையில்லை," என்றார் வாசன்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஆகியோர் கூட்டத்திற்கு சென்றதை சுட்டிக்காட்டிய அவர், "மக்கள் பிரச்சனையில் அரசியல் புகுத்த கூடாது. நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்த்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழக மக்களுக்கு உங்களது கடமையை நீங்கள் செய்யவில்லை என குற்றம் சாட்டுகிறோம்," என்று கூறினார்.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்தும் வாசன் கருத்து தெரிவித்தார். "எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு பாகுபாடு இன்றி நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறது. அதை தாண்டி எந்தெந்த திட்டங்களுக்கு அதிகம் தேவையோ அந்தத் திட்டங்களுக்கு படிப்படியாக எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கிக் கொண்டிருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு பட்ஜெட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் குறிப்பிட்டு அனைத்து மாநிலத்திற்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றால், அது பாஜகவிற்கு மட்டுமல்ல காங்கிரஸ்க்கும் சாத்தியமில்லை. இதற்கு முன்பு இருந்தவர்களும் இதை செய்ததில்லை.
திமுக இன்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு காரணம் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதது தப்பு எனும் மக்களின் கருத்தை மறக்கக்கூடிய வகையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்' என்றார்.
மேலும் பேசியவர், கட்சியில் மறுசீரமைப்பு நடந்துள்ளது. கட்சியில் உள்ள அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். மீண்டும் அனைவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் பிரதமர் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நல்லரசாக செயல்படும் மத்திய அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றக்கூடிய நல்ல சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு பெரும்பாலான மக்கள் இந்தியாவில் வாக்களித்துள்ளனர். எனவே பலமான தமிழகமும், வலிமையான பாரதமும் ஏற்பட பிரதமர் தலைமைக்கு தமிழக கட்சிகள் துணை நின்று வளமான தமிழகத்தை உருவாக்க 2026 இல் வழி வகுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள்.
மின் கட்டண தொடர்ந்து மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட கொங்கு மாவட்டங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. சிறு தொழில்கள், கைத்தறிவு, விசைத்தறி போன்றவை மிகப்பெரிய அளவில் மின்சார கட்டண உயர்வால் பாதிப்படைந்துள்ளன. எனவே, மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கீழ்பவானி பாசன பகுதியில் எல்பிபி வாய்க்கால் பணிகளை சீரமைத்து ஒவ்வொரு ஆண்டு போல் இந்த ஆண்டு 15ஆம் தேதி விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
எல் அண்ட் டி பைபாஸ் சாலை ஆறு வழிச்சாலையாக விஸ்தரிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என தாமாக கேட்டுக்கொள்கிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் பற்றி முறையாக சரியாக உண்மை நிலையை வெளிப்படுத்தி மாணவர்களுக்கு எந்தவித அசௌகரியம் இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை' என தெரிவித்தார்.