பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் தாலுகா அரசூர் ஊராட்சிக்குட்பட்ட செங்கோடகவுண்டன்புதூர் மற்றும் முதலிபாளையம் பிரிவு பகுதிகளில், மக்கள் பயன்பாட்டிற்கு உதவாது எனக் கூறப்படும் நடைபாதை மேம்பாலப் பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, பாஜகவினருடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கப்பள்ளி–வாளையார் தேசிய நெடுஞ்சாலை (NH-544) வழியாகச் செல்லும் இந்தப் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்கவும், வாகனங்கள் தடையின்றி இயங்கவும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தன. வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.



பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்டகால கோரிக்கையை புறக்கணித்து, மக்கள் பயன்பாட்டிற்கு பயனளிக்காத இரண்டு இடங்களில் நடைபாதை மேம்பாலப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை மீண்டும் முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

பெரும்பாலானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையே பயன்படுத்தி வரும் நிலையில், நடைபாதை மேம்பாலம் தங்களது அன்றாட போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யாது என்றும், அதனாலேயே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோதே மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து,நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு, நடைபாதை மேம்பாலப் பணிகளை தடுத்து நிறுத்தினர். "மக்கள் பயன்படுத்த முடியாத நடைபாதை மேம்பாலம் வேண்டாம்; வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்லக்கூடிய முறையான மேம்பாலமே வேண்டும்" என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பாஜக கோவை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜெய்ஹிந்த் ஆர். முருகேசன் மற்றும் பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில் பாஜகவினரும் அங்கு திரண்டனர். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் நிலவியது.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நீலாம்பூர் காவல்துறையினர், மக்களுடன்பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து, காவல்துறையினரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திங்கட்கிழமை எடுக்கப்படும் முடிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் சூலூர் மற்றும் அரசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...