2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழில்களும், தொழிலாளர்களும் நிறைந்த பகுதி. பஞ்சாலைகளும், இன்ஜினியரிங் தொழில்களும் கோவையின் அடையாளங்கள்.



கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில் சிங்காநல்லூர் தவிர்த்த மீதி 5 தொகுதிகளும் அதிமுக வசமே உள்ளன. கோயமுத்தூர் தொகுதியில் மொத்தம் 19 இலட்சத்து 31 ஆயிரத்து 558 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9 இலட்சத்து 65 ஆயிரத்து 120 ஆண் வாக்காளர்களும், 9 இலட்சத்து 66 ஆயிரத்து 239 பெண் வாக்காளர்களும், 199 திருநங்கைகளும் உள்ளனர்.

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழில்களும், தொழிலாளர்களும் நிறைந்த பகுதி. பஞ்சாலைகளும், இன்ஜினியரிங் தொழில்களும் கோவையின் அடையாளங்கள். நகர பகுதிகளில் வெட்கிரைண்டர், மிக்சி, பேன், மோட்டர் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு, குறுந்தொழில் கூடங்கள் நிறைந்துள்ளன. சூலூர், பல்லடம் பகுதிகளில் விசைத்தறி கூடங்களும், நெசவு தொழிலும் அப்பகுதி மக்களின் வாழ்வதாரமாக உள்ளது. பல்லடம் பகுதிகளில் கறிக்கோழி உற்பத்தியும், கோவை புறநகர் பகுதிகளில் விவசாயமும் பிரதான தொழில்கள். தொழில் நகரமான கோவையில், தேர்தல் களத்தையும் தொழில்களே தீர்மானிக்கின்றன.

என்ன செய்தார் எம்.பி?

1952 ம் ஆண்டில் இருந்து தேர்தலை எதிர்கொள்ளும் கோயம்புத்தூர், இதுவரை 16 மக்களவை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் இடதுசாரி கட்சிகளே அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும் என 6 முறை வெற்றி பெற்றுள்ளன. அதேசமயம் அதிக வெற்றிகளை பெற்ற தனி கட்சியாக 5 வெற்றிகளுடன் காங்கிரஸ் உள்ளது. திமுக, பாஜக ஆகியவை தலா இரண்டு வெற்றிகளையும், அதிமுக ஒரு வெற்றியையும் பதிவு செய்துள்ளன. 

2014 ம் ஆண்டு முதல் முறையாக கோவையில் தேர்தல் களம் கண்ட அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.பி.நாகராஜ் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டாம் இடத்தையும், திமுக வேட்பாளர் கணேஷ்குமார் மூன்றாம் இடத்தையும், காங்கிரஸ் வேட்பாளர் பிரபு நான்காம் இடத்தையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் ஐந்தாம் இடத்தையும் பிடித்தனர்.



கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான ஏ.பி.நாகராஜன், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் வழக்கறிஞர்கள் குழுவில் பணியாற்றியவர். தர்மயுத்தத்தினால் அதிமுக பிளவுபட்டதில் இருந்து, டிடிவி தினகரன் ஆதரவளராக இருந்து வருகிறார். சசிகலா கணவர் நடராஜன் உயிரிழந்த போது, சசிகலா பரோலுக்கு ஜாமீன் கொடுத்தவர், நாகராஜன். அதிமுகவிலும் இல்லாமல், அமமுகவிலும் இல்லாமல் இரண்டிற்கும் இடையே தவித்து வருகிறார்.



நாடாளுமன்ற செயல்பாடுகளை பொறுத்தவரை 80 சதவீத வருகையை நாகராஜன் வைத்துள்ளார். 28 விவாதங்களில் பங்கேற்றுள்ள அவர், 594 கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார். தொகுதி வளர்ச்சி நிதியாக ஒதுக்கப்பட்ட 22.50 கோடியில், 16.92 கோடியை திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக நாகராஜனின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்பது கோவை மக்களின் கருத்தாக உள்ளது. தொகுதி பக்கம் எம்.பி.யை பார்த்ததே இல்லை என்பது தொகுதிவாசிகளின் புகாராக உள்ளது. நாடாளுமன்றத்திலும் சொல்லும்படியாக எதுவும் செய்யவில்லை என அடுக்கடுக்காக புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக சிறுவாணி தண்ணீரும், தொழில் வளமும் கோவையின் அடையாளங்கள். ஆனால் கோவையின் அடையாளத்திற்கான பிரச்சணைகளிலும் எம்.பி.யாக குரல் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.



பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றினால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தொழில் முடக்கம், நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களை பாதுகாக்க எதுவும் செய்யவில்லை என்பது குறுந்தொழில் முனைவோரின் புகார். சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்ட விவகாரத்திலும் நாகராஜன் மெளனம் காத்து வருகிறார்.



இவரது பதவி காலத்தில் போத்தனூர் - பொள்ளாச்சி அகல இரயில் பாதை திட்ட பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால் தென்மாவட்டங்களுக்கு மீண்டும் இரயில்கள் இயக்கப்படாதது தொழிற்துறை மற்றும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கோவை - பெங்களூரு இடையே இரயில் சேவை துவக்கப்பட்டாலும், இரவு நேர இரயில் இயக்கப்படவில்லை. சிறு, குறுந்தொழில் முனைவோரின் நீண்ட கால எதிர்பார்ப்பான இராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. 

கோவையின் தேவைகள்

கோவை நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்தல், குறுந்தொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டைகள் அமைத்தல், கோவை - சென்னை இடையே விரைவு இரயில் அதிகப்படுத்துதல், ஐ.ஐ.டி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் அமைத்தல், வனவிலங்குகள் பிரச்சணைக்கு தீர்வு, விமான நிலைய விரிவாக்கம், உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளை அதிகப்படுத்துதல் உள்ளிட்டவை கோவை மக்களின் முக்கிய கோரிக்கைகளாக நிறைப்படாமல் நீடிக்கிறது. விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்தல், கெயில் எரிவாயு குழாய் பதித்தல் ஆகியவை இன்னும் தீர்க்கப்படாத பிரச்சணைகளாக உள்ளன.



நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தொழில்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது தொழில் துறையினரின் முக்கிய கோரிக்கை. ஜிஎஸ்டியினால் இன்றளவும் தொழில்துறையினர் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். ஏராளமான தொழிற்கூடங்கள் மூடப்படுவும், தொழிலாளர்கள் வேலை இழக்கவும் ஜிஎஸ்டி காரணமாக இருப்பதாக குறுந்தொழில் முனைவோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஜிஎஸ்டி வரிகளை குறைக்க வேண்டுமென்பது கோவை தொழில் துறையினரின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று.

மோதும் கட்சிகளும், வேட்பாளர்களும்

17 வது மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், கோயமுத்தூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எட்டு முறை கோவையில் போட்டியிட்டுள்ள அக்கட்சி, 1967 மற்றும் 2009 ஆகிய இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. 2009 தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சியின் பி.ஆர்.நடராஜன், மீண்டும் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். 9 வது முறையாக தேர்தல் களம் காணும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், 4 வது முறையாக கோயம்புத்தூர் தொகுதியில் நடராஜன் போட்டியிடுகிறார்.



அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் கோயம்புத்தூர் தொகுதியும் ஒன்று. பாஜகவும் கோயமுத்தூர் தொகுதியில் 8 முறை போட்டியிட்டு 1998 மற்றும் 1999 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சி.பி.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். 9 வது முறையாக தேர்தல் களம் காணும் பாஜக சார்பில், 5 வது முறையாக கோயம்புத்தூர் தொகுதியில் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். 1998 ம் ஆண்டு முதல் தொடர்ந்து கோவையில் போட்டியிடும் அவர், 2009 தேர்தலில் மட்டும் போட்டியிடவில்லை.



அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் என்.ஆர். அப்பாதுரை போட்டியிடுகிறார். முன்னாள் ஆவின் சேர்மனாக இவர், அமமுகவில் அமைப்பு செயலாளராக இருக்கிறார். 1989 ம் ஆண்டு அதிமுக ஜெ அணி சார்பில் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு பெற்றி வாய்ப்பை இழந்த அப்பாதுரை, தினகரன் அணி சார்பில் கோவை மக்களவை தொகுதியில் முதல் முறையாக களமிறங்குகிறார். இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர் கல்யாணசுந்தரம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட உள்ளன. இதுபோக சில சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். 

கோவை தொகுதியில் வெற்றியை எட்டி பிடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட்களும், பாஜகவும் நேரடியாக மோதும் ஒரே தேர்தல் களம், கோயம்புத்தூர் மட்டுமே. இது காவிக்கும், சிவப்பிற்குமான மோதல்.



இரு தரப்பும் சம பலத்துடன் மோதுவதால், தேர்தல் பரப்புரை களம் வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும்!

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...