குப்பை மேலாண்மையில் அசத்திக்காட்டிய ராமலிங்க நகர் குடியிருப்புவாசிகள்

குப்பைகளைப் பிரித்து கொட்டுவதன் முக்கியத்துவத்தையும், குப்பை மேலாண்மை பற்றிய விழிப்புணர்வையும் குடியிருப்புவாசிகளிடம் ஏற்படுத்தி, குப்பையில்லாத வசிப்பிடமாக ராமலிங்க நகரை (வார்டு எண் 12 மற்றும் 13) உருவாக்கியுள்ளனர் அப்பகுதி மக்கள்.


கோவை, ஜனவரி 20

கோவை மாநகரில், தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளைப் பிரிப்பதில் சிரமம் ஏற்படுவதால், பல டன் குப்பைக் கழிவுகள், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில், மலைக் குன்றுகளாக குவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றால், சுற்றுச்சூழல் மேலும் பாதிப்படைகிறது. இந்தப் பிரச்சனையை சரிசெய்ய, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாகப் பிரித்து, துப்புரவு தொழிலாளர்களிடம் கொடுக்குமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், குப்பைகளைப் பிரிப்பதில் சிரமம் இருந்து வருகிறது.

இதற்கு தீர்வாக, குப்பைகளைப் பிரித்து கொட்டுவதன் முக்கியத்துவத்தையும், குப்பை மேலாண்மை பற்றிய விழிப்புணர்வையும் குடியிருப்புவாசிகளிடம் ஏற்படுத்தி, குப்பையில்லாத வசிப்பிடமாக ராமலிங்க நகரை (வார்டு எண் 12 மற்றும் 13) உருவாக்கியுள்ளனர் அப்பகுதி மக்கள்.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட இந்தப் பகுதி, சில வாரங்களுக்கு முன்புவரை குப்பைக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட சாலையோடும், நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகளோடும் காட்சியளித்தது. ஆனால், தற்போது குப்பையே இல்லாத, சுத்தமான தெருவாக மாறியிருக்கிறது.



‘குழந்தைகள் பூங்கா அருகே வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியை, அகற்ற வேண்டும் என்பது எங்களின் பல வருட கனவாக இருந்தது. காரணம், முறையான பராமரிப்பு இல்லாததால், குப்பைகள் நிறைந்து வழிந்தது, அசுத்தமான கழிவுகள் தெருவில் வீசப்பட்டன. இதனால், இருபதுக்கும் மேற்பட்ட தெருநாய்களும், குதிரைகளும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தன. குப்பைகளின் துர்நாற்றம் பாதசாரிகளை முகம் சுழிக்க வைப்பதோடு, வாகன விபத்துகளையும் உருவாக்கின. மேலும், சுகாதாரமில்லாத வசிப்பிடமாக இப்பகுதி மாறிவந்தது. இந்நிலையில், மாநகராட்சியின் உதவியோடு, ராமலிங்க நகர் குடியிருப்பு வாசிகள் அனைவரும் இணைந்து தெருக்களை சுத்தம் செய்யும் பணியில் இறங்கி, பொது குப்பைத் தொட்டிகளை அப்புறப்படுத்திவிட்டு, முறையாகக் குப்பைகளை அகற்றத் தொடங்கினோம். இப்பொழுது தான் சுத்தமான இடத்தில் வசிப்பதாக நாங்கள் உணர்கிறோம்’ என்றார் பூங்கா அருகே வசித்துவரும் திரு. எஸ். அனந்த நாராயணன்.



‘இப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பை, ஊசி, மருந்து போன்ற ஆபத்தான கழிவுகளை, ஆபத்தான குப்பை என்று அவர்களே பிரித்து கொடுப்பதால், குப்பைகளை கையாள்வது மிக எளிதாக உள்ளது. மறுசுழற்சி குப்பைகளால், துப்புறவு பணியாளர்களுக்கு கிடைக்கும் தொகை, குப்பைகளை பிரித்து கொடுப்பதால் அதிகரித்துள்ளது. அவர்களும் உற்சாகமாக துப்புரவுப் பணியை செய்து வருகின்றனர்’ என்றார் இப்பகுதியின் துப்புரவு மேற்பார்வையாளர் திரு. M. முருகன்.



இந்த மாற்றத்தை சாத்தியமாக்கிய அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கத்தின், செயலாளர், திரு. M.S. விஜயராகவன் கூறியதாவது, ‘குப்பை மேலாண்மையில் ஈடுபட்டு வரும் தன்னார்வ அமைப்புகளிடம் ஆலோசித்து, அவர்களின் வழிகாட்டுதளோடு, சென்ற வாரத்திலிருந்து இப்பகுதியை சுத்தம் செய்யத் தொடங்கினோம். வீடு வீடாக சென்று குப்பைகளைப் பிரித்து கொட்டுமாறு, கேட்டுக்கொண்டோம்.



குடியிருப்பு வாசிகளும் தங்களின் வசிப்பிடத்தை சுத்தமாக பராமரிக்க, ஆர்வம் காட்டினர். மாநகராட்சி ஊழியர்களோடு, குடியிருப்பு வாசிகளும் இணைந்து பொறுப்போடு களப்பணியாற்றியதால், வெகு சிலநாட்களில் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இதுபோன்று, நகரின் எல்லாப் பகுதிகளிலும், குப்பை மேலாண்மை மற்றும் தூய்மையான சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நூறு சதவிதம் குப்பையில்லாத, தூய்மையான நகராக கோவையை உருவாக்க மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்’ என்று கேட்டுக்கொண்டார்.

இப்பகுதியில் உள்ள இரண்டு பூங்காக்களும், எட்டு சாலைகளும் ராமலிங்க நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக தற்போது சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.



கோவை மாநகரில் பெருகி வரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களின் காரணமாக சுற்றுச்சூழல் பெருமளவு மாசுபட்டு வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த அரசின் சார்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தூய்மை பாரதம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களை, மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகமும், பல தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பொதுமக்களும் பொறுப்புணர்வோடு களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என்று உணர்த்தியுள்ளனர் ராமலிங்க நகர் குடியிருப்பு வாசிகள்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...