நாடு முழுவதும் கடுமையான வெயில் நிலவுகிறது. அனல் காற்று மற்றும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் முதியவர் ஒருவர் வெயிலுக்கு சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம், மேற்கு வங்கம், ஒடிஷா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும், அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் இருந்த வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடுமுழுவதும் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது.
தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று மழை பெய்யும், சூறைக்காற்று வீசும் என்று எச்சரித்த வானிலை ஆய்வு மையங்கள், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ள சித்திரை வீதியில், வெயில் கொடுமை தாங்காமல் முதியவர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.