பேட்டி : கனிமோழி – மாநில மகளிரணி செயலாளர், திமுக
மதுவிலக்கு அமல்படுத்தப்படும் போது திமுகவினர் நடத்தும் மதுபான ஆலைகளும் மூடப்படும் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததில் இருந்தே, மக்கள் மீது அதிமுக அரசிற்கு அக்கறையில்லை என்பது தெளிவாகுவதாக தெரிவித்தார். அதிமுகவிற்கு ஆதரவான அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் திமுக பலமுறை புகார் அளித்த போதும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார். மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பரப்புரைக்காக பயன்படுத்தும் ஹெலிகாப்டர், பொதுக்கூட்ட மேடைகள், ஆட்கள் அழைத்து வருதல் ஆகிய செலவுகள் யாருடைய கணக்கில் சேர்க்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டுமென தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதி மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறிய போதே, திமுகவினர் மற்றும் அவர்களது உறவினர்கள் நடத்தும் மதுபான ஆலைகள் மூடப்படுமென தெளிவாக அறிவித்து இருப்பதாகவும் கனிமொழி தெரிவித்தார். எதிரணி வேட்பாளர் மீதான அச்சத்தினால் தான் அதிமுக வேட்பாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவதாகவும், திமுக தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா காப்பி அடித்து பேசி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்தே, திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது அதிமுக அரசு பல தவறான பொய் வழக்குகளை திணித்து இருப்பதை தெரிந்து கொள்ள முடியுமென கனிமொழி தெரிவித்தார்.