கோவை: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மண்டல டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.
தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகளை உடனடியாக மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மண்டல டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளி முள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுகட்டயமாக இழுத்துச் சென்று போலிசார் கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மறியல் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
