கோவை சவுரிபாளையம் பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு அவ்வழியாக வந்த லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சவுரிபாளைம் 66 வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி முடிந்து புதிதாக சாலை அமைக்கப்பட்டு 6 மாதங்களான நிலையில், தீடிரென சுமார் 20 அடி நீளத்திற்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த லாரி சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.
இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி பொறியாளர் கணேஷ்யிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையான மேற்பார்வையின்றி தரமில்லாமல் சாலை அமைக்கப்பட்டதே சாலையில் பள்ளம் தோன்ற காரணம் எனவும் தரமான சாலை அமைக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தினர். அப்போது அங்கு வந்த அப்பகுதி அதிமுக கவுன்சிலர் தாமரை செல்வி மற்று தொண்டர்கள் பொதுமக்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு கலைந்து போக வற்புறுத்தினர். இதனையடுத்து அங்கு வந்த திமுகவை சேர்ந்த அப்பகுதி முன்னாள் கவுன்சிலரும் தற்போதைய அதிமுக கவுன்சிலருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சவுரிபாளையம்சாலையின் அடியில் பதித்துள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே இப்பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது தற்காலிகமாக சாலை சரி செய்யப்படும் எனவும் தேர்தல் முடிந்த பின்னர் அப்பகுதியில் புதிய சாலை அமைக்கப்படும் என மாநகராட்சி பொறியாளர் தெரிவித்தார்.