குறைந்தபட்ச அளவை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்: குடிநீர்த் தேவைக்கு தண்ணீர் கிடைக்குமா?

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது. இதனால் தொடர்ந்து குடிநீர்த் தேவைக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் வழங்க மறுத்து வருகிறது. தென்மேற்குப் பருவ மழையால் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை மாறி, பருவ மழையும் பொய்த்துப் போனது. வடகிழக்குப் பருவ மழையாவது கைகொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், வழக்கத்தைவிட குறைவாகப் பெய்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்தது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 32 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து நொடிக்கு 750 கன அடி வீதம் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தைவிட திறப்பு அதிகமாக இருப்பதால், செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35.69 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 9.97 டி.எம்.சி.யாக சரிந்தது.

மேட்டூர் அணையில் உள்ள மீன் வளத்தைப் பாதுகாக்கவும், மேட்டூர்-ஆத்தூர் குடிநீர்த் திட்டம், சேலம் மாநகராட்சி தனிக் குடிநீர்த் திட்டம், காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம், கோனூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், கொளத்தூர் குடிநீர்த் திட்டம், வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், மேட்டூர் நகராட்சி தனிக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர்த் திட்டங்களுக்காகவும் மேட்டூர் அணையில் 9.5 டி.எம்.சி தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்தபட்ச அளவை எட்டி உள்ளது. கடந்த 2014, ஏப்ரல் 25ஆம் தேதி அணையின் நீர் மட்டம் 9.69 அடியாக இருந்தது. அதன்பிறகு இப்போதுதான் நீர்மட்டம் குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது.

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் வரை டெல்டா பாசனக் கால்வாய் கரையோர கிராமங்களுக்கு குடிநீர்த் தேவைக்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அணையிலிருந்து அதிகபட்சம் நொடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அதுவரை மேட்டூர் அணையில் இருப்பு உள்ள தண்ணீர் போதுமானதா என்பது கேள்விக்குறியே.

நீர்மட்டம் தொடர்ந்து சரிந்தால், பல்வேறு குடிநீர்த் திட்டங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

Newsletter