பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் பெறுவதற்கான கட்டணம் உயர்வு

கோவை, டிசம்பர் 2

தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் பெறுவதற்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முதல் கோவை மாநகராட்சியிலும் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, கட்டண உயர்வு பற்றிய தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் அதிகமாக பகிரப்படாததால், சான்றிதழ் பெற வந்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 

பொதுவாக பிறப்பு அல்லது இறப்பு நடந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் 21 நாட்களுக்கு மேல் 30 நாட்களுக்குள் பதிவு செய்தால் 2 ரூபாய் தாமதக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணம் தற்போது 50 மடங்கு உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதிவு செய்ய, ரூ.5, ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல், பதிவு செய்யப்பட்டால் அதற்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்தது. அதுவும் தற்போது ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க ஓராண்டுக்கு மேல் விண்ணப்பித்தால் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணம் தற்போது ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழின் நகல் கேட்டு விண்ணப்பித்தால், ஒவ்வொரு நகலுக்கும் தேடுதல் கட்டணமாக முதல் ஆண்டுக்கு ரூ.2 வசூலிக்கப்பட்டது. அது தற்போது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் ஆண்டுக்கும் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.2 என்பது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதுவரை ரூ.5க்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் நகலைப் பெற இனி ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை கூடுதல் நகல் பெற கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. தற்போது, ஒவ்வொரு நகலுக்கும் ரூ.200 செலுத்த வேண்டும்.

‘என்னுடைய அப்பா இரண்டு வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அவருடைய பெயரில் உள்ள அரை சென்ட் நிலத்தை என் அம்மாவின் பெயரில் மாற்றுவதற்கு, அப்பாவின் இறப்பு சான்றிதழை இணைக்க வேண்டும். இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு பத்து ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும் என்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தால், ஐநூறு ரூபாய் கட்டணம் செலுத்தச் சொல்கின்றனர். எதற்காக இந்த அதிக கட்டண உயர்வு என்று முறையான அறிவிப்புகள் இங்கு வைக்கப் படவில்லை. வசதி படைத்தவர்களை இந்த கட்டண உயர்வு எந்த வகையிலும் பாதிக்காது. தினக்கூலி தொழிலாளர்களும் ஏழை மக்களும் தான் இதில் அதிக பாதிப்படைவார்கள்’ என்று வேதனையோடு சொல்லிச் சென்றார் ஆவரம்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி திரு.குமார்.

திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதால், மற்ற நாட்களைவிட நேற்று மாநகராட்சியில் உள்ள கட்டண வசூல் மையத்தில், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் பெற கட்டணம் செலுத்தவரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

'படிப்படியாக இந்த கட்டணம் உயர்த்தப் படாமல் திடீரென்று 50 மடங்கு உயர்த்தியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளி முதல் பத்திரப் பதிவு வரை எங்கு சென்றாலும் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் முக்கியமாக தேவைப்படுகிறது. இதற்கு முன் இந்த சான்றிதழ்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைத்ததால் ஏழை மக்கள் பயன்பெற்று வந்தனர். இனிமேல் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவு செய்யாமல் இவற்றை பெற முடியாது. இதனால், ஏழை மக்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் எட்டாக் கணியாக மாற வாய்ப்புள்ளது' என்கிறார் தனியார் கல்லூரி பேராசிரியர் திரு. ஜோசப்.

கட்டண உயர்வு பற்றி மாநகராட்சி அலுவலரிடம் கேட்டபோது,  கட்டணம் அதிகம் என்றாலும், அரசு உத்தரவை செயல்படுத்த வேண்டிய இடத்தில் தாங்கள் இருப்பதாக பதிலளித்தனர்.

இதுகுறித்து பேசிய தி.மு.க எம்.எல்.ஏ நா. கார்த்திக் கூறியதாவது, 'தமிழக அரசு முற்றிலும் செயலற்று கிடக்கிறது. அனைத்து துறைகளிலும் போதிய நிதி ஒதுக்கப்படாததால் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளிடமிருந்து கிடைக்கப்படும் மானியங்கள் , உள்ளாட்சி அமைப்புகள் இல்லாதால் தடைபடுகிறது. உள்ளாட்சி நிர்வாகிகளின் பற்றாக்குறையே இதற்கு ஒரு முக்கிய காரணம். இதனால், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகம், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அளவிற்கு நிதிப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளது. இந்த நிதிச் சுமையை பொதுமக்கள் தலையில் கட்டும் அரசின் செயலை வன்மையாக கண்டித்து, தி.மு.க சார்பில் போரட்டம் நடத்தப்படும்' என்று தெரிவித்தார்

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...