பல்வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1.18 கோடி கொள்ளையடித்த டிரைவர்


சென்னை : மதுரவாயல் சுடலைமாடன் கோயில் தெருவில் 'லாஜி கேஷ்' எனும் பெயரில் வங்கி ஏடிஎம்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு சென்று நிரப்பப்படுகிறது. இதற்காக 30க்கும் மேற்பட்ட நிறுவனத்தின் கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில சமயம், திருவொற்றியூரில் உள்ள ரோசன் என்ற டிராவல்சில் இருந்தும் வாகனங்களை வாடகைக்கு எடுப்பார்கள். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் இந்நிறுவனத்துக்கு சொந்தமான காரில் சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் நிரப்புவதற்காக ரூ.2 கோடியே 30 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு நான்கு பேர் காரில் சென்றனர்.

காரை தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர் இசக்கிபாண்டி (32) ஓட்டியுள்ளார். பணம் கொண்டு சென்ற அந்த வேன், திருவொற்றியூரைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இசக்கிபாண்டியுடன், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜோயல் முல்லா (40) என்பவர் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்காக சென்றார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர்களுடன் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் டெக்னீஷியன்கள் சதீஷ்குமார், பாபு என்ற இருவரும் சென்றனர். நான்கு பேரும் கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 ஏடிஎம்களில் பணத்தை நிரப்பிவிட்டு திருவேற்காடு அருகே உள்ள வேலப்பன்சாவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப வந்தனர். ஒரு பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சதீஷ்குமார், பாபு இருவரும் ஏடிஎம் மையத்தின் உள்ளே சென்றனர்.

ஜோயல் முல்லாவும், டிரைவர் இசக்கிபாண்டியும் வேனிலேயே இருந்தனர். அப்போது இசக்கிபாண்டி ஜோயல் முல்லாவிடம் ''எதிர்புறம் உள்ள டீக்கடையில் சென்று டீ குடித்துவிட்டு பாக்கு வாங்கி வரலாம்'' என்று அழைத்துள்ளார். ஜோயல் முல்லாவும் சம்மதிக்க காரை எடுத்துக்கொண்டு எதிர்புறம் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். பிறகு ஜோயல் முல்லாவிடம் இசக்கிபாண்டி, ''நீ முதலில் சென்று டீ குடித்துக்கொண்டிரு. நான் பின்னால் வருகிறேன்'' என்று சொல்ல ஜோயல் முல்லாவும் டீக்கடைக்கு சென்றார். அப்போது இசக்கிபாண்டி திடீரென வேனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். இதில் அதிர்ச்சியடைந்த ஜோயல் முல்லா கூச்சல் போட்டுக்கொண்டே காரின் பின்னால் ஓடியுள்ளார். ஆனால் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்ததால் வேன் வேகமாக சென்று மறைந்தது. இதையடுத்து ஏடிஎம் மையத்திற்கு வந்த ஜோயல் முல்லா அங்கிருந்த சதீஷ்குமார், பாபுவிடம் நடந்ததை கூறியுள்ளார். உடனே இருவரும் இசக்கிபாண்டியை செல்போனில் தொடர்புகொண்டனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 

இதையடுத்து தங்களின் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே நிறுவனத்தினர் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். இதையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் இருந்து மதுரவாயல், திருவேற்காடு, போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள புளியம்பேடு என்ற பகுதியில் கார் மட்டும் நின்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இசக்கிபாண்டி இல்லை. மேலும் காரில் இருந்த ரூ.1 கோடியே 18 லட்சம் கொண்ட 3 பெட்டிகளையும் காணவில்லை. இதையடுத்து அம்பத்தூர் துணை கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட போலீசார் அனாதையாக நின்றிருந்த வேனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கடத்தப்பட்ட காரை பின் தொடர்ந்து வேறு வாகனத்தில் இசக்கிபாண்டியின் கூட்டாளிகள் வந்திருக்கலாம். பின்னர் பணத்தை கொள்ளையடித்து விட்டு காரை மட்டும் நிறுத்தி விட்டு தப்பியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அனைத்து சோதனை சாவடிகளையும் போலீசார் உஷார்படுத்தினர். திருவேற்காடு அருகில் உள்ள புளியம்பேடு, நூம்பல், செட்டியார் அகரம், துண்டலம், காட்டுப்பாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து புறநகர் காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.1 கோடியே 18 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிய இசக்கிபாண்டி கடந்த வருடம்தான் வேலையில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் வேலை பார்த்த டிராவல்ஸ் நிறுவனத்தில் தான் நெல்லையைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். இதனால், அவர் கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற தவறான தகவலை தெரிவித்து வேலையில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. இதனால் அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...