சாத்தூரில் பட்டப்பகலில் பழிக்குப்பழி சம்பவத்தால் பரபரப்பு, அரசு பஸ்சில் வாலிபர் சுட்டுக்கொலை


சாத்தூர்: அரசு பஸ்சில் வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்புறம் அமர்ந்து தலையில் சுட்டு விட்டு தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பழிக்குப்பழியாக நடந்த இச்சம்பவம் சாத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் காந்தாரி(48). கோவில்பட்டியில் சொந்தமாக 5 ஆம்புலன்ஸ்கள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு கனகராஜ் (27), கருப்பசாமி (25), மந்திரமூர்த்தி (22) என 3 மகன்கள் மற்றும் சத்யா (17) என்ற மகள் உள்ளனர். கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்த முகமது ரபீக் மகன் அப்துல்லா (18).

இவர் கடந்த ஜூலை 2ம் தேதி நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்தாரி மகன்களான கனகராஜ், மந்திரமூர்த்தியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதைதொடர்ந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எண்ணி, கருப்பசாமி கோயம்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தனியார் ஆம்புலன்ஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 9ம் தேதி கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு கருப்பசாமி வந்தார். விடுமுறை முடிந்து நேற்று காலை கோவைக்கு கிளம்பினார். 

நெல்லையிலிருந்து கோவை சென்ற அரசு பஸ்சில் கருப்பசாமி ஏறினார். பஸ் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் படந்தால் சந்திப்பில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டபோது கருப்பசாமிக்கு பின் சீட்டில் அமர்ந்து வந்த மர்ம நபர் கருப்பசாமியின் பின்னந்தலையில் துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். சுட்டுக்கொன்ற மர்ம நபர் சர்வீஸ் ரோடு வழியாக சாத்தூர் நகருக்குள் தப்பி ஓடினார். சக பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர்.இதுதொடர்பாக பஸ் கண்டக்டர் சிவராஜன் சாத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து கருப்பசாமியின் பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டு மூலம் முகவரியை கண்டுபிடித்தனர். தென்மண்டல டிஐஐி ஆனந்தகுமார்சோமானி, விருதுநகர் எஸ்பி ராஜராஜன், சாத்தூர் டிஎஸ்பி குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சாத்தூர் நகர் மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்த கருப்பசாமிக்கு கவிதா என்ற மனைவியும், கர்ணியா(1) என்ற பெண் குழந்தையும் உள்ளது. 

கருப்பசாமி தந்தை காந்தாரி கூறுகையில், 'கோவில்பட்டியில் இருந்தால் கொன்று விடுவார்கள் என்றுதான் கோவைக்கு அனுப்பி வைத்தேன். விடுமுறை முடிந்து ஊருக்கு அனுப்பி வைத்தோம். திட்டமிட்டு பழிக்குப்பழியாக எனது மகனை கூலிப்படை மூலம் கொன்று விட்டனர்' என்று கதறி அழுதார்.அடிக்கடி வந்த கொலை மிரட்டல்: கருப்பசாமியின் பாட்டி கிருஷ்ணம்மாள் கூறுகையில், 'அப்துல்லா கொலை செய்யப்பட்டதில் இருந்து எங்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்தது. கருப்பசாமியை கொன்று விடுவார்கள் என்றுதான் கோவைக்கு அனுப்பினோம். இப்படி பழிக்குப்பழியாக கொன்று விட்டனர். ஜெயிலில் இருந்த கூலிப்படையை சேர்ந்த ஒருவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் எடுத்து எனது பேரனை கொலை செய்துள்ளனர்' என்றார்.5 தனிப்படை அமைப்பு: கொலையாளியை பிடிக்க விருநகர் டிஎஸ்பி குமார், சாத்தூர் டிஎஸ்பி குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் விருதுநகர் மாவட்ட எல்லை மற்றும் சோதனைச்சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

பயன்படுத்தியது நாட்டு கைத்துப்பாக்கி: கருப்பசாமி சுட்டுக்கொலை செய்யப்பட்ட பஸ்சில், முன்னதாக கோவில்பட்டி புது பஸ் ஸ்டாண்டில் 4 பேர் மட்டுமே ஏறியுள்ளனர். பஸ்சில் மொத்தமாக 22 பயணிகளே இருந்தனர். அனைவரும் முன் இருக்கைகளில் அமர்ந்திருந்ததால், கடைசி இருக்கையில் இருந்த கருப்பசாமியை, எளிதாக சுட்டுக்கொல்ல முடிந்திருக்கிறது. கொலைக்கு பயன்படுத்தியது நாட்டுக் கைத்துப்பாக்கி எனத்தெரிய வந்துள்ளது.

விரட்டி சென்ற போலீசார்

சாத்தூர் டீக்கடை உரிமையாளர் கருப்பசாமி கூறுகையில், 'காலை 11 மணியளவில் படந்தால் சந்திப்பில் பயணிகள் பதறியடித்துக் கொண்டு இறங்கினர். அப்போது ஒரு மர்ம நபர் சர்வீஸ் ரோடு வழியாக தப்பி ஓடினார். அவரை பாதுகாப்பில் இருந்த டிராபிக் போலீசார் விரட்டி சென்றனர். அதற்குள் அந்த பகுதி கறிக்கடை வழியாக தப்பி ஓடி விட்டார்' என்றார்.

தந்தை, அண்ணனுக்கு தனிப்படை வலை

கடந்த ஜூலை 2ம் தேதிதான் அப்துல்லா கொலை செய்யப்பட்டுள்ளார். அப்துல்லாவும், கொலையான கருப்பசாமியும் நண்பர்களாக இருந்துள்ளனர். ஒரு பெண் தகராறில் அப்துல்லாவை கருப்பசாமி தரப்பினர் கொலை செய்துள்ளனர். இக்கொலை நடந்த 3 மாதங்களில் கருப்பசாமி கொலையானதால், போலீஸ் கவனம் அப்துல்லா தரப்பினர் மீது விழுந்துள்ளது. இதுதொடர்பாக அப்துல்லாவின் தந்தை முகமது ரபீக், அண்ணன் சதாம் உசேன் ஆகியோரையும் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

சாத்தூரில் '2'

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2004ல் அதிமுக மாவட்ட செயலாளராக, அமைச்சராக இன்பத்தமிழன் இருந்தார். இவர் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில், திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக ரவிச்சந்திரன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்திற்கு பிறகு தற்போது, சாத்தூர் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...