வரைவு தேசிய கல்வி கொள்கையை தி.மு.க. தைரியத்துடன் எதிர்க்கும்; மத்திய மந்திரியிடம் மு.க.ஸ்டாலின் சார்பில் கொடுத்த மனுவில் தகவல்

சென்னை, வரைவு தேசிய கல்வி கொள்கையை தி.மு.க. தைரியத்துடன் எதிர்க் கும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலின் சார்பில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நேற்று மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேசிய கல்வி கொள்கை

2016-ம் ஆண்டுக் கல்விக் கொள்கை பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்கனவே தி.மு.க.வின் நிலையை அதன் பல்வேறு அம்சங்களையும் விளக்கி தமிழில் வெளியிட்ட தனது அறிக்கை மூலம் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த அறிக்கையின் தொடர்ச்சியாக, தேசிய கல்வி கொள்கையின் மீது தி.மு.க.வின் நிலை பற்றி தெரிவிப்பதற்காக இந்த மனு அளிக்கப்படுகிறது.

எடுத்த எடுப்பில், சுருங்க சொல்லும் வகையில் 2016-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையை தி.மு.க. எதிர்க்கிறது. அது பாரம்பரிய குலக்கல்வி முறையை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது; அது சமஸ்கிருதத்தை திணிக்கிறது; அது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது; அது கல்வியை வர்த்தகமயமாக்குகிறது; அது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஒதுக்கீட்டைப் பாதிக்கிறது. அது மாணவர்களைப் பிளவுபடுத்தி, சிறப்புரிமை பெற்றோர், சிறப்புரிமை பெறாதோர் என்றும் மேலும் பல வகையிலும் பிரிக்கிறது.

பாரம்பரிய குல தொழில்

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசால் 1986-ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்கு படுத்தல்) சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம், 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் தங்கள் பாரம்பரிய குலத் தொழிலை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கிறது.

இதுவரை குல தொழில்கள் பெரும்பாலும் அவர்களுடைய சாதிகளின் மூலமே தீர்மானிக்கப்பட்டன. இது 2009-ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படைகளுக்கு எதிரானதாகும். அதில் குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு வரை மாணவர்களை தேர்வில் தோல்வி அடைந்ததாகக் கூறி அதே வகுப்பில் வைத்திருக்கக்கூடாது. அல்லது அவர்கள் பள்ளியில் படிப்பை தொடருவதைத் தடைசெய்யக்கூடாது.

சாதீய திட்டம்

1953-ம் ஆண்டு சி.ராஜ கோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதல்-அமைச்சராக இருந்தபோது அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட, தொடர்ந்து கல்வி கற்பிக்கப்படுவதுடன் பெற்றோரின் தொழிலையும் கற்றுக்கொள்ளும் தொடக்கக் கல்வியின் சென்னை திட்டத்தை நினைவு கூரலாம். இந்தத் திட்டம் பிரச்சினைக்குரியதாக மாறியது ஏனெனில், இந்து தொழில்கள் சாதி அடிப்படையிலானவை என்பதால் சாதி மதக் குருக்கள் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கான சாதீயத் திட்டமாக இருந்தது. அது குலக்கல்வித் திட்டம் என்று கூறப்பட்டது.

இத்திட்டத்திற்கு தி.மு.க. வின் தலைமையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அது ராஜாஜியின் ராஜினாமா மூலம் முடிவுக்கு வந்தது. இறுதியில் முதல்-அமைச்சர் கே.காமராஜரால் ரத்து செய்யப்பட்டது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மிகவும் எதிர்க் கப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்ய முயற்சிக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம்.

இருமொழி கொள்கை

இந்திய துணை கண்டம் இரு முக்கிய மொழிகளின் குடும்பங்களை பெற்றுள்ளது. அவை திராவிட மொழிகளின் குடும்பம் மற்றும் சமஸ்கிருத மொழிகளின் குடும்பம். இது ஏற்கனவே பிஷப் ராபர்ட் கால்டுவெல்லால் தமிழை முதன்மை மொழியாக கொண்ட திராவிட மொழிகளின் குடும்பம் சமஸ்கிருத மொழிகளின் குடும்பத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பது நிலை நாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலைகளில் சமஸ்கிருதத்துக்கு சிறப்பு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்கப்படுவதை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் தமிழ்நாடு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது.

வரைவுக் கொள்கை மாணவர்களிடையே பாரபட்சத்தை அறிமுகப்படுத்துகிறது. அது 10-ம் வகுப்பில் ‘ஏ’ மற்றும் ‘பி’ என்று 2 வகையானத் தேர்வு முறைகளைத் திட்டமிட்டுள்ளது. ‘ஏ’ வகை தேர்வு மேல் படிப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கும், ‘பி’ வகைத் தேர்வு தொழில் பயிற்சி பெறச் செல்லும் மாணவர்களுக்குமானது. எனவே, பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள், குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய வற்றைச் சேர்ந்தவர்கள் மேல் படிப்புக்கு செல்ல முடியாமல் தடை செய்யப்படும் அபாயம் உள்ளது.

தைரியத்துடன் தி.மு.க. எதிர்க்கும்

“2016 வரைவு தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளடக்கங்கள்” பகுதியில் (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு) “இடஒதுக்கீடு” பற்றி ஒரு வார்த்தை கூட இடம் பெறாதது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதில் இருந்து இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ரத்து செய்வதற்கான அபாயம் நெருங்கியுள்ளது என்பது தெளிவாகிறது. பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் தலைமையில், திராவிடர் கழகமும், தி.மு.க.வும் முன்னெடுத்துச் சென்று தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட மாபெரும் போராட்டத்தால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டை இடம் பெற செய்வதற்கான முதல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது என்பது சரித்திரம். சமூக நீதியில் ஆழமாக வேரூன்றிய திராவிட இயக்கத்தின் குழந்தை தி.மு.க. என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததாகும்.

2016-ம் ஆண்டு வரைவு தேசிய கல்விக் கொள்கை பெரும் அளவிலான அதிருப்தியையும் எதிர்ப்பையும் பல்வேறு தரப்பு மக்களிடையேயும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள், ஆசிரியர் மற்றும் சிறுபான்மையினர் இடையே அதை எதிர்க்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. இதில் பல மொழி, பல கலாச்சார, பல இன மற்றும் பல சமயத்தினர் வேற்றுமையில் ஒற்றுமையை அனுபவித்து வரும் நாடு. இந்த வரைவுக்கொள்கை, காலத்தால் சோதிக்கப்பட்டு தனித்தன்மை வாய்ந்த நிலையைப் பெற்றுள்ள நாம் பெருமை கொள்ளும் தன்மையை நிச்சயமாகப் பாதிக்கும். இந்தக் கொள்கை திராவிடர் இயக்கம் எழுந்து நிற்கும் அசைக்க முடியாத அடித் தலங்களான அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. எனவே தி.மு.க. 2016-ம் ஆண்டு வரைவு தேசியக் கல்விக் கொள்கையை தைரியத்துடன் எதிர்ப்பது என்ற மிகவும் உறுதியான நிலையை எடுத்துள்ளது.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...