உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் பேருந்து, கழிப்பறை வசதி இல்லாததால் மக்கள் அவதி.


கோவை மாநகரில் உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலை ஓர் முக்கிய சாலையாகும். திருச்சி சாலை, அவினாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உக்கடம் சாலை, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளுக்கு சென்று வருவதற்கு முக்கிய சாலையாக இந்த உக்கடம்- சுங்கம் பைபாஸ் சாலை உள்ளது.

 

நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இந்த உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் இலகு ரக வாகனங்கள் முதல் லாரி, டிரக் போன்ற கனரக வாகனங்கள் வரை தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? என்பதை பார்ப்போம்!

பேருந்து வசதி இல்லை:-

உக்கடம் பேருந்து நிலையம் முதல் சுங்கம் பேருந்து நிலையம் வரை (உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலை) 5 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இப்பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் பேருந்து வசதிகள் இப்பகுதியில் கிடையாது. 

பேருந்து வசதி இல்லாததால் பெரும் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உக்கடம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவற்றிற்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால் 5 கிலோ மீட்டர் தொலைவு வரையும் நடந்து செல்லும் சூழ்நிலை உள்ளது.

கழிவறை வசதி இல்லை:-

உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள அம்புரோஸ் காலனி, ஏரிமேடு, இந்திரா நகர், பாரின் நகர், அபிராமி நகர், ஆல்வின் நகர், சண்முகா நகர் மற்றும் சுங்கம் மேம்பாலம் வரையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கிறது. 

அதில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளில் உள்ள கழிவறையை உபயோகிக்கின்றனர். ஆனால், இப்பகுதிகளில் அதிகமாக வசித்து வரும் பாமர மக்களுக்கு அடிப்படை வசதியான கழிவறை வசதிகள் இல்லாததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உக்கடம்- சுங்கம் பைபாஸ் சாலை ஓரங்களில் திறந்த வெளியில் மலம் கழித்து வருகின்றனர். 




பழுதடைந்த சாலை விளக்குகள்:-

உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் பழுதடைந்த தெருவிளக்குகளால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பைபாஸ் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சுங்கம் சிக்னல் பகுதியில் இருந்து உக்கடம் பேருந்து நிலையம் வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட தெரு விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவது கிடையாது. இதனால் இந்த தெருவிளக்குகள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. பல நாட்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் அரசு கலைக்கல்லூரி கிளாசிக் டவர் சாலை வழியாக வாலாங்குளம் பைபாஸ் சாலைக்கு வரும் வாகன ஓட்டிகள், உக்கடத்தில் இருந்து சுங்கம் செல்லும் வாகன ஓட்டிகள், சுங்கத்தில் இருந்து உக்கடம் வரும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். 

தெருவிளக்குகள் பழுதால், சில சமயங்களில் வாகன விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்ட போது:-



எனது பெயர் மோகன பிரியா, வயது 30. நான் பிறப்பதற்கு முன்பு இருந்தே எனது தாய், தந்தை இங்கு தான் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நான் பிறந்த நாள் முதல் இன்றுவரை இப்பகுதியில் பேருந்து வசதிகள் இருந்தது கிடையாது.

 

அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு இப்பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. அதேபோல் உக்கடம், ரயில்நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் செல்வதற்கு 80 முதல் 100 ரூபாய் வரை செலவாகிறது.

 

எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதற்கு இரண்டு, மூன்று கிலோ மீட்டர் வரை நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, இங்கு பேருந்து வசதியும், அதேபோல் இப்பகுதியில் கழிவறை வசதியும் மாநகராட்சி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.



கல்லூரி மாணவன் விக்னேஷ் பேசுகையில்:- 

உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள பிஷப் அம்புரோஸ் கலை அறிவியல் கல்லூரியில் நான் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது வீடு கண்ணம்பாளையத்தில் உள்ளது. நான் தினமும் கல்லூரிக்கு வந்து செல்ல 17 கிலோ மீட்டர் தொலைவுள்ளது. 



சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வருவதற்கு பேருந்து வசதி கிடையாது. எனவே சுங்கம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் நடந்து சென்று வருகிறேன். உக்கடம் மற்றும் சுங்கம் பகுதிக்கு இடையில் நாங்கள் கல்வி பயிலும் கல்லூரி உள்ளதால் மாணவர்கள் அனைவரும் 2 முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. 

முதலாம் ஆண்டும் முதல் இன்று வரை இந்நிலைமை தான். இது போன்று முன்னாள் கல்லூரி மாணவர்களுக்கும் இதே நிலைமைதான். எனவே எங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்கள் கல்லூரி பகுதியில் பேருந்து நிலையம் அமைத்தும் பேருந்து வசதியும் ஏற்படுத்தி தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 

பிஷப் அம்புரோஸ் கல்லூரி செயலாளர் மரிய இருதயநாதன் கூறுகையில்:- 

அம்புரோஸ் காலனியில் உள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் படிக்கின்றனர். தொலைவில் இருந்து கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு கல்லூரியில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 



மற்ற மாணவர்களுக்கு கல்லூரி சார்பில் சுங்கம் பேருந்து நிலையம் முதல் கல்லூரி வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாணவர்கள் மிதிவண்டியில் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இப்பகுதியில் பேருந்து வசதிகள் இல்லாததால் அவசரத்திற்கு பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதற்கு உடனடி தீர்வாக இப்பகுதியில் பேருந்து வசதி எற்படுத்தப்பட வேண்டும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...