சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட கொடநாடு வழக்கு - விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தனிப்படை அமைத்து கோவையில் விசாரணை நடத்த திட்டம் என தகவல்.



கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது, அங்கு காவல் பணியில் இருந்த இரவு நேர காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் குற்றம்சாட்டப்பட்டது.

இதனிடையே முறையாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி அடுத்தடுத்து 3 அதிகாரிகள் வசம் இந்த வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக இந்த வழக்கை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழியும் கொடநாடு எஸ்டேட்டின் மற்றொரு பங்கு தாரருமான சசிகலா, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற்றி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தனிப்படை போலிசாரிடமிருந்து வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி எஸ்.பி மாதவன் மேற்பார்வையில், ஏடிஎஸ்பி முருகவேல், சந்திர சேகர், அண்ணாதுரை, வினோத் உள்ளிட்ட 3 டிஎஸ்பிகள், ஒரு ஆய்வாளர் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியது போலவே, சிபிசிஐடி போலிசாரும் கோவையில் அலுவலகம் அமைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். புதிதாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யாமல், சம்மன் மட்டுமே வழங்கி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தபட்ட வயதானவர்கள் மற்றும் பெண்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் கொலை நடைபெற்ற இடங்களில் மீண்டும் நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது இல்லத்திற்கு சென்று விசாரிக்கவும், வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜ் தொடர்பாக சேலத்தில் விசாரணை செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...